மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை. இதனால் ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாக தொடர்கிறது.
இதன் மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாதத்துக்கான நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
குறைந்து வரும் ரெப்போ விகிதம்: கடந்த சில ஆண்டுகளாக ரெப்போ விகிதம் 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல்) அது மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவிலான பொருளாதார சூழல், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை, பணவீக்கம், ஜிடிபி போன்றவற்றுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.