கோவை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.87,000-ஐ நெருங்கியிருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே வருவதால் கோவையில் தங்க நகை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பிலும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. 45 ஆயிரம் பொற்கொல்லர்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் இந்தத் தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வழக்கமாக கோவை மாவட்டத்தில் தினமும் 200 கிலோ அளவிலான தங்க நகை விற்பனை நடைபெறுவது வழக்கம். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியது: “தங்கத்தின் மீது 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. முன்பு தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. தொழில் துறையினர் கோரிக்கையை ஏற்று மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இறக்குமதி வரியை 6 சதவீதமாக குறைத்துள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காசா போர் சூழல், அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. கோவையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.86,760 ஆக (ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் தவிர்த்து) உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வியாபாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
திருமணம் உள்ளிட்ட விசேஷ காலங்களிலும் தங்க நகைகள் விற்பனை குறைந்துள்ளது. நான்கு சவரன், ஐந்து சவரன் நகைகள் வாங்கும் நடவடிக்கைகள் மாறி ஒரு சவரன் ஒன்றரை சவரன் தங்க நகைகள் வாங்கி வருகின்றனர். தினமும் 200 கிலோ அளவு தங்க நகைகள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தினமும் 40 கிலோ வியாபாரம் நடப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. தினசரி வணிகம் 15 சதவீதமாக குறைந்துவிட்டது.
தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப ஒரு கிராமில் தொடங்கி சிறிய அளவில் பல்வேறு வகையான தங்க நகைகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய நகைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் இதுபோன்ற நகைகள் விற்பனை தான் அதிகம் காணப்படும். நான்கு சவரன் நகைகள் வாங்குவது எல்லாம் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலைக்கு மாறியுள்ளது” என்று முத்து வெங்கட் ராம் தெரிவித்தார்.
கோவை சந்தையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட தங்கத்தின்(ஒரு சவரன்) விலை (ஜிஎஸ்டி வரி தவிர்த்து) நிலவரம்:
- செப்.20- ரூ.82,240
- செப்.22 – ரூ.83,200
- செப்.23 – ரூ.84,880
- செப்.29 – ரூ.85,360
- செப்.30 – ரூ.86,760