சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக இரு முறை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,000-ஐ தாண்டி புதிய உச்சம் அடைந்துள்ளதால், பொதுமக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். இன்று ஒரே நாளில் பவுனுக்கு 1,680 அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 20-ம் தேதி தங்கத்தின் விலை ரூ.82,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. மேலும், தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.23) காலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,500-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.560 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.84,000-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று மாலையிலும் மீண்டும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், வங்கியில் வைப்பு வைத்திருந்தோர் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றால், தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு உள்ளது” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.72 ஆக வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவும், ஆபரணத் தங்கம் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.