ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ரூ.75,000-ஐ தாண்டி உச்சம் தொட்டுள்ளது. இதற்கான காரணங்களையும், தங்கம் விலை ரூ.80,000-ஐ தொடுமா என்பது பற்றியும் சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
பொதுவாக, மக்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை பங்குச் சந்தை, பாண்டுகள், வங்கி டெபாசிட்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றின் மூலம் முதலீடு செய்வர். இவற்றில், அதிகம் பாதுகாப்பானதாக இருப்பது தங்கம்தான். உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த சூழல்களிலும் கூட மதிப்பு குறையாமலும், இதர வர்த்தகப் போக்குகளின் மதிப்பு குறையும் வேளைகளில் மதிப்பு உயருவதும்தான் தங்கத்தின் தனிச் சிறப்பு. எனவேதான், தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தவை என்று பார்க்கும்போது, ரஷ்யா – உக்ரைன் யுத்தம், இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர், இஸ்ரேல் – ஈரான் போர் முதலானவை மட்டுமின்றி, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் மேற்கொண்ட அதிரடி பொருளாதார நடவடிக்கைகளையும் உள்ளடக்கலாம்.
இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கு டாலரில் பணம் கொடுக்க வேண்டும். அதன் காரணமாக தினசரி மாறுபடும் அமெரிக்க டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கமும் தங்கத்தின் விலையில் தாக்கம் கொடுக்கிறது. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனாலும் இந்தியாவில் தங்கம் விலை கூடுகிறது.
2025 ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58,000 ஆக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜூலை 23-ம் தேதி ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை 700 ரூபாய் அளவில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 6, புதன்கிழமை நிலவரப்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.9,380 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.75,040 ஆகவும் மீண்டும் புதிய உச்சத்துடன் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.10,233 ஆகவும் சவரன் விலை ரூ.81,864 ஆகவும் புதிய உச்சம் கண்டுள்ளது. வெள்ளி விலை கூட புதிய உச்சம் தொட்டுள்ளது. அதாவது, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.126 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,26,000 ஆகவும் இருக்கிறது.
தற்போது 22 காரட் தங்கம் விலை பவுன் ரூ.75,000-ஐ தாண்டி இருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 25 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88-ஐ நெருங்கும் அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இது, தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
சர்வதேச பொருளாதார பின்னடைவுகள், பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், பெரிய முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை உயர்ந்து ஆபரணத் தங்கம் விலைவும் விண்ணை முட்டியிருக்கிறது. இந்த விலை உயர்வுப் போக்கு தொடரும் என அஞ்சப்படுகிறது.
அத்துடன், ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறும் என்பதால் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்புள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு, அதாவது 2025 இறுதிக்குள், ஒரு கிராம் ரூ.10,000 எனவும், ஒரு சவரன் ரூ.80,000 எனவும் தங்கம் விலை உச்சத்தை எட்டக்கூடும் என வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.
இந்தச் சூழலில், தங்கத்தில் முதலீடு செய்வதும் நல்லதுதான். அவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தங்களது நிதி நிலையைப் பொறுத்து, சரியான நிதி நிபுணர்களை அணுகி, எந்த வடிவில், எவ்வளவு தொகையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று தனிப்பட்ட முறையில் ஆலோசனைப் பெறுவதே நல்லது.