நவீன மீன்பிடி முறைகள் மூலம் அழிந்துவரும் கட்டு மரங்களுக்கு தெர்மகோல் மூலம் மீண்டும் புத்துயிர் அளிக்கத் தொடங்கி உள்ளனர் ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள்.
பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் கடல், ஆறு, ஏரி, குளம் என நீர் நிலைகளால் சூழப்பட்டிருக்கின்றன. நவீன போக்குவரத்து வசதிகள் அற்ற பண்டைய காலங்களில் நீர் நிலைகளை போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தின் விளைவாக மரத்துண்டுகளை ஒன்றாக கட்டி தண்ணீரில் மிதக்க வைக்க முடியும் என்பதை தமிழர்கள் கண்டறிந்தனர். இதுவே கட்டு+மரம் = கட்டு மரம் என்றானது.
கட்டுமரங்களை போக்குவரத்துக்காகவும், நீர் நிலைகளில் உணவு சேகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டதை சங்க இலக்கியங்களில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தோணி, பங்றி, திமில் போன்ற பல வார்த்தைகள் மூலம் அறியலாம். உயர்ந்து எழுந்துவரும் அலைகளையுடைய கடலில் சென்று மீன்பிடிக்கும் படகை கொண்ட ‘திமிலோன்’ வலை விரித்துப் பிடித்து வந்த மீன்களை தழையாடை உடுத்திய அழகிய பர்தவப் பெண் திருவிழாக்கள் நடைபெறும் தெருக்களில் விற்று வருவர். இத்தகைய வளம் பொருந்திய சிற்றூர்க்குத் தலைவனே’ என்று படகில் சென்று மீன் பிடித்தலையும் தெருவில் மீன் விற்றலையும்,
”ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ, திமிலோன் தந்த கடுங்கண் வயமீன், தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும், கானல் அம் சிறுகுடி” என்ற அகநானூற்று 320: 1- 5 பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. 1690-ம் ஆண்டு தமிழகத்துக்கு கடல் மார்க்கமாக வந்த வில்லியம் டம்பியர் என்ற ஆங்கிலேயப் பயணி, தமிழர்களின் கட்டு மரங்களைப் பற்றி தனது பயணக் குறிப்பில் எழுதி உள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆங்கில அகராதி catamaran என்ற வார்த்தை 17-ம் நூற்றாண்டில் தமிழில் கட்டுமரம் என்ற சொல்லில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளது. இன்றும் உலகில் எல்லா மொழிகளிலும் கட்டு மரம் என்றே வழங்கப்படுகிறது.
இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், இலங்கையிலும் பயன்பாட்டில் உள்ள கட்டு மரங்களை கோரமண்டல் வகை, மன்னார் வளைகுடா வகை, ஆந்திரா வகை, ஒடிசா வகை, என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இத்தகைய கட்டு மரங்கள் நவின மீன்பிடி முறைகளினால் அழிந்து வருகின்றன. இந்நிலையில், அழிந்து வரும் கட்டு மரங்களுக்கு தெர்மகோல் மூலம் புத்துயிர் அளித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து ராமேசுவரத்தில் உள்ள பாரம்பரிய மீனவர் திரித்துவம் கூறியதாவது: தமிழகத்தில் விசைப் படகுகள் அனுமதிக்க தொடங்கிய நாளில் இருந்து கட்டுமரங்களின் அழிவு தொடங்கிவிட்டது. 2004 டிசம்பரில் தமிழகத்தின் கடற்கரைகளை சுனாமி அலைகள் தாக்கியபோது அதிகளவில் காணாமல் போனதும் கட்டுமரங்கள் தான்.
ஒரு பாரம்பரிய கட்டுமரத்தின் முன்பகுதி அணியம் என்றும், பின்பகுதியை புறமாலை என்றும் மரத்துண்டுகளை இணைத்து கட்டப்பட்ட பகுதி வாரிக்கல் என்றும், கட்டுமரத்தை நேராகச் செலுத்துவதற்கு பயன்படும் பலகையை அடைப்பலகை என்றும், காற்றின் உதவியுடன் செலுத்துவற்காக துணியால் ஆன பாய்களும், கூரைப் பாய்கள் என்றும் அழைப்போம். கட்டுமரங்களை தயாரிப்பதற்கு அந்தந்த கடற்பகுதியில் கிடைக்க கூடிய வேப்ப மரம், நாவல் மரம், இலுப்பை மரங்களை பயன்படுத்துவதுண்டு. கட்டு மரங்களை செய்பவருக்கு ஓடாவி என்றும் பெயர்.
புதிதாக கட்டப்பட்ட கட்டுமரத்தை மிதக்க வைத்து சோதனை செய்த பின்னர் முதன்முதலாக மீன்பிடிக்கச் செல்லும்போது பூஜை செய்து கடலில் இறக்குவோம். இந்த பூஜையின்போது கட்டுமரத்தை செய்த ஓடாவிக்கு முதல் மரியாதை அளிக்கப்படும். கட்டுமரத்தில் குறைந்தது ஒருவரிலிருந்து அதிகப்பட்சம் ஐந்து பேர் வரையிலும் சென்று மீன்பிடிப்பர்.
இறால், கணவாய், நண்டு ஆகியவற்றை அதிகளவில் விசைப்படகுகளில் பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால், ராமேசுவரத்தின் கரையோரங்களில் மீன்வளம் இல்லாமல் போனது. இதனால் பாரம்பரிய கட்டுமரங்களும் அழியத் தொடங்கின. கடற்கரையிலிருந்து ஆழமான பகுதியில் நிற்கும் படகுகளுக்குச் செல்வதற்கு மிதவை தேவைப்பட்டதால் தெர்மகோலைப் பயன்படுத்தி குறைந்த விலையில் கட்டு மரங்களை செய்யத் தொடங்கினோம். தற்போது இந்த தெர்மகோலினால் ஆன கட்டுமரங்கள் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.
தெர்மகோல் கட்டுமரம் அதிக எடை இல்லாதது. வீட்டில் இருந்து சைக்கிள் மூலம் கூட கடற்கரைக்கு கொண்டு சென்று விடலாம். குறைந்தது ஆயிரம் ரூபாயில் இதனை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும். தெர்மகோல்களை மிதவை போல் ஒன்றிணைத்து மூங்கில் மரத்தின் உதவியுடன் நைலான் கயிற்றில் கட்டி சுற்றிலும் சிமென்ட் சாக்கைக் கொண்டு மூடிவிட்டால் தெர்மகோல் கட்டுமரம் தயாராகிவிடும். சவுக்கு மரம் கம்பை துடுப்பாகவும், கல்லை நங்கூரமாகவும் பயன்படுத்தலாம்.
அவ்வப்போது சிமிண்ட் சாக்கையும், தெர்மகோல் சீட்டுகளையும் மாற்றினால் போதும். தெர்மகோல் கட்டுமரங்களை எளிதாக பயன்படுத்த முடியும் என்பதாலும், எரிபொருள், பல ஆயிரக்கணக்கிலான வலைகள் எல்லாம் தேவையில்லை. தூண்டில்கள், சிறிய ரக வீச்சு வலைகளும் மீனவனின் உழைப்பு மட்டும் போதுமானது என்று கூறினார்.