கோவை: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிய வகையில் இந்தியாவுக்கு 2022 மே மாதம் முதல் 2025 மே மாதம் வரை 17.2 மில்லியன் டாலர், அதாவது ரூ.1,49,989 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் மொத்த இழப்பு ரூ.15,29,000 கோடியாக இருந்திருக்கும். ஆண்டுக்கு ரூ.96,923 கோடி இழப்பு ஏற்படும். மத்திய அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறியது: “நாடு சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை 78 ஆண்டு காலமாக நம்பிக்கைக்குரிய நட்பு நாடு ரஷ்யா. அன்று முதல் இன்று வரை வர்த்தக உறவு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உரிய உதவிகளால் இந்த உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 44 ஆண்டுகளுக்கு பின் 1991 முதல் அமெரிக்காவுடன் வர்த்தக உறவு மேற்கொண்டு வருகிறோம். இந்திய ஏற்றுமதியில் 17.90 சதவீதம் அமெரிக்காவின் பங்கு உள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் மொத்த விற்பனையில் இந்தியாவின் பங்கு வெறும் 2.7% சதவீதம் தான்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 7.46 லட்சம் கோடி ரூபாய்க்கும், இறக்குமதி 3.56 லட்சம் கோடி ரூபாய்க்கும் 2024-25-ல் இந்தியா வர்த்தகம் செய்துள்ளது. நாம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி அதிகளவு செய்வது வைரம் ரூ.89,000 கோடி, மருத்துவ சாதனங்கள் ரூ.64,000 கோடி, பெட்ரோலிய பொருட்கள் ரூ.42,000 கோடி, நகைகள் ரூ.32,000 கோடி. அரிசி ரூ.9,000 கோடி. வாகன உதிரிபாகம் ரூ.7,000 கோடி. ஆடைகள் ரூ.6,000 கோடி. ரசாயனம் ரூ.5,000 கோடி, இயந்திரங்கள் ரூ.4,000 கோடி, விவசாய சாதனங்கள் ரூ.3,000 கோடி.
அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது விமான உதிரிபாகம் ரூ.74,000 கோடி. மருந்து, மருத்துவ சாதானங்கள் ரூ.49,000 கோடி. ராணுவம், பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.38,000 கோடி. பெட்ரோலிய பொருட்கள் ரூ.33,000 கோடி. பொறியியல் சாதனங்கள் ரூ.22,000 கோடி, பிளாஸ்டிக் பொருட்கள் ரூ.18,000 கோடி. வாகன உதிரி பாகங்கள் ரூ.16,000 கோடி. ரசாயனம் உரங்கள் ரூ.12,000 கோடி. சோலார் எரிசக்தி ரூ.9,000 கோடி. தோல் பொருட்கள் ரூ.6,000 கோடி வர்த்தகம் செய்கிறோம்.
நமது நாட்டில் அன்னிய சொலாவணி அதிகமாக செலவிடுவது கச்சா எண்ணைகளுக்கே. நாள் ஒன்றுக்கு 58 லட்சம் பீப்பாய் தேவை. மொத்த தேவையில் 88 சதவீதம் இறக்குமதி செய்கிறோம். இதில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகளில் ஜூலை 2025 மாதம். ரஷ்யா 15,29,000, ஈராக் 9,15,000, சவுதி 6,83,000, எமிரேட்ஸ் 4,61,000, அமெரிக்கா 3,72,000 பீப்பாய்கள்.
ஜூன் 2025-ல் ரஷ்யாவிடம் 21,04,000 பீப்பாய்கள், அமெரிக்காவிடம் 3,03,000 பீப்பாய்கள், ஜூலை மாதம் ரஷ்யாவிடம் இருந்து 15,29,009 பீப்பாய்கள், அமெரிக்காவிடம் இருந்து 3,72,000 பீப்பாய்கள் வாங்கி உள்ளோம். கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சர்வதேச சந்தை விலை ரூ.5,871. ரஷ்யா ரூ.5,232 ரூபாய்க்கு இந்தியாவுக்குத் தருகிறது. சர்வதேச விலையை விட ரஷ்யாவில் 639 ரூபாய் விலை குறைவு.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிய வகையில் இந்தியாவுக்கு 2022 மே மாதம் முதல் 2025 மே மாதம் வரை 17.2 மில்லியன் டாலர். அதாவது ரூ.1,49,989 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் மொத்த இழப்பு ரூ.15,29,000 கோடியாக இருந்திருக்கும். ஆண்டுக்கு ரூ.96,923 கோடி இழப்பு ஏற்படும். ரஷ்யாவிடம் நாம் வாங்காமல் தவிர்த்து பிற நாடுகளில் வாங்கி இருந்தால் தேவை அதிகரித்து புள்ளி விவரங்களின்படி குறைந்தது 870 ரூபாய் பீப்பாய் ஒன்றுக்கு விலை உயர்ந்து இருக்கும்.
மத்திய அரசு உறுதியான நடவடிக்கை காரணமாக அந்நிய செலாவானி இருப்பு கடந்த 5 ஆண்டு காலமாக கணிசமாக உயர்ந்ததுடன் வேளாண் துறை மற்றும் நாட்டின் மொத்த தொழில் துறையில் 95 சதவீதம் உள்ள குறு, சிறு நடுத்தர தொழில் முனைவோர்களின் நலனையும் 145 கோடி மக்களின் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் வரி உயர்வு இருந்திருந்தால் கூட போட்டியிட்டு இருப்பார்கள். 50 சதவீதம் என்ற அறிவிப்பு கடும் சவால் என்பதால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை அரசே ஏற்று சலுகைகள் வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.