புதுடெல்லி: இந்தியாவில் யுபிஐ வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பில்லியன் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளன.
இது தொடர்பாக தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) புள்ளிவிவரம் நேற்று வெளியானது. இதன்படி நாட்டில் யுபிஐ பரிவர்த்தனை முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20.01 பில்லியனை எட்டியது. இது ஜூலை மாதத்தை விட (19.47 பில்லியன்) 2.8% அதிகம் ஆகும். யுபிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.24.85 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சராசரி தினசரி பரிவர்த்தனை 645 மில்லியனாக (ஜூலையில் 628 மில்லியன்) உயர்ந்துள்ளது.
மேலும் சராசரி தினசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ.80,177 கோடியாக இருந்தது. யுபிஐ கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி ஒரே நாளில் 700 மில்லியன் பரிவர்த்தனைகளை கடந்து சாதனை படைத்திருந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி கடந்த ஜூலையில் டிஜிட்டல் பணம் செலுத்துவதில் மகாராஷ்டிரா 9.8 சதவீத பங்களிப்புடன் முதல் இடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடகா (5.5 சதவீதம்), உத்தரபிரதேசம் (5.3 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் இருந்தன.