புதுடெல்லி: இந்தியப் பெண்கள் சேமிப்பு என்ற மனநிலையிலிருந்து தற்போது முதலீடு என்ற பார்வைக்கு மாறியுள்ளனர். தங்கள் பணத்தை தெளிவான இலக்குகளுடன் அவர்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். நாட்டின் நிதி சூழலை மாற்றியமைப்பதில் பெண் முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இதுதொடர்பாக டிஜிட்டல் வெல்த் மேனேஜ்மென்ட் முதலீட்டு தளமான பின்எட்ஜ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2012-ல் புதிய முதலீட்டாளர்களில் பெண்களின் பங்கு 18%-மாக மட்டுமே இருந்தது. இன்று 42% அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் முதலீட்டு நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பு 50% அதிகரித்துள்ளது. மேலும், 2028-ம் ஆண்டுக்குள் அனைத்து புதிய முதலீட்டாளர்களிலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருப்பார்கள்.
பெண்கள் இப்போது பணியிடத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இதனால், அவர்களிடம் நிதி சுதந்திரம் மற்றும் விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஓய்வூதியத் திட்டமிடல் ஒரு முக்கிய முன்னுரிமையாக அவர்களிடம் உருவெடுத்துள்ளது, மேலும், 30.82% பெண்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு பின்எட்ஜ் தெரிவித்துள்ளது.