ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய தம்பதி, பழநி அருகே பாப்பம்பட்டியில் இயற்கை விவசாய முறையில் முள் சீத்தா பழம் சாகுபடி செய்து, அதிலிருந்து டிப் டீ, பவுடர், மிட்டாய் என மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்து அசத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் துரை பாண்டி. இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மனைவி கோமதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்பி விவசாயம் செய்ய முடிவு செய்தார். ஆனால், அருப்புக்கோட்டையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதால், தண்ணீர் வசதி உள்ள ஒரு ஊரில் தோட்டத்தை விலைக்கு வாங்கி விவசாயம் செய்ய முடிவு செய்தார். ஆனால், அருப்புக்கோட்டையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதால், தண்ணீர் வசதி உள்ள ஒரு ஊரில் தோட்டத்தை விலைக்கு வாங்கி விவலயம் செய்யத் திட்டமிட்டனர்
அதன்படி, பழநி அருகேயுள்ள பாப்பம்பட்டியில் தென்னந்தோப்பை விலைக்கு வாங்கினர். என்ன பயிரிடலாம் என்ற யோசனையில் இருந்தபோது புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் முள் சீத்தாப் பழத்துக்கு இருப்பதை அறிந்து கொண்டனர்.
பின்னர், தேனி மற்றும் ஆந்திராவில் இருந்து முள் சீத்தாப் பழக்கன்றுகளை வரவழைத்து, தோட்டத்தில் நடவு செய்தனர். நடவு செய்த நாள் முதல் தற்போது வரை ஒரு துளிக்கூட ரசாயனம், பூச்சிக் கொல்லி பயன்படுத்தாமல் முழுவதும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
அறுவடை செய்த முள் சீத்தாப் பழங்களை விற்பனை செய்தது போக, மீதமுள்ள பழங்கள் வீணாகாமல் தடுக்க அந்த பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்து, அதிலும் லாபம் பார்த்து வருகின்றனர். அதாவது, பழங்களை சிறு சிறு துண்டுகளாக்கி சூரிய ஒளி கூடார உலர்த்தியில், நன்கு உலர வைத்து, வெந்நீர் அல்லது பாலுடன் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் தயார் செய்கின்றனர். இதேபோல், நன்கு உலர வைத்த பழங்களை அரைத்து, ஜாம், மிட்டாய் தயாரிக்கின்றனர். இது மட்டுமின்றி, முள் சீத்தாப் பழ இலைகளை சூரிய ஒளி கூடார உலர்த்தியில் உலர்த்தி, டிப் டீயும் தயாரிக்கின்றனர். இந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
இதுகுறித்து துரைபாண்டி, கோமதி ஆகியோர் கூறியதாவது: சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா என்று கூறுவதுபோல், சொந்த ஊருக்கே திரும்பி வந்து விவசாயம் மேற்கொள்ள விரும்பினோம். ஆனால், சொந்த ஊரில் தண்ணீர் பிரச்சினை என்பதால், நாங்கள் விரும்பியது போலவே பழநியில் தோட்டம் விலைக்கு வாங்கினோம். விவசாயம் சார்ந்த தேடலின் போது, முள் சீத்தாப் பழத்தின் நன்மையும், அதற்கு இருக்கும் மவுசு குறித்தும் அறிந்து கொண்டோம். 2019-ல் முள் சீத்தாப் பழக்கன்றுகளை நடவு செய்தோம். 2022 முதல் நல்ல மகசூல் கிடைத்து வருகிறது. நவம்பர் மாதம் பூக்க தொடங்கி டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்கள் மகசூல் கிடைக்கும்.
அதேபோல், ஏப்ரல் மாதம் பூக்கத் தொடங்கி மே, ஜூனில் மகசூல் கிடைக்கும். ஒரு பழம் குறைந்தது 800 கிராம் முதல் 2 கிலோ வரை எடை இருக்கும். முள் சீத்தாப் பழம் எளிதாக கிடைத்து விடாது. அதனால் எல்லா காலங்களிலும் கிடைக்கும் வகையில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய திட்டமிட்டோம். தற்போது, பழம் மற்றும் இலையில் இருந்து பவுடர், பழத்தில் இருந்து மிட்டாய், இலையில் இருந்து டிப் டீ தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். முள் சீத்தாவால் பலனடைந்தவர்கள் தேடி வந்து எங்களிடம் வாங்கி செல்கின்றனர். நஞ்சில்லா காய்கறிகளை தேடி ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இயற்கை விவசாயம் மூலம் முள் சீத்தாப் பழத்தை சாகுபடி செய்து கொடுப்பதால் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் இருக்கிறோம். என்று கூறினர்.