புதுடெல்லி: நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன்) நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8% வளர்ச்சி அடைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட 6.8%-ஐ விட அதிகம் ஆகும்.
கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.5% ஆக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் ஜிடிபி 1.3% ஆதிகம் ஆகும். மேலும் 5 காலாண்டுகளில் இல்லாத அளவை எட்டி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2023-24 நிதியாண்டின் 4-வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 8.4% ஆக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக அதிகபட்ச அளவாக இப்போது பதிவாகி உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் ஜிடிபி 5.2% ஆக இருந்தது. ஆனால் நம் நாட்டின் ஜிடிபி 7.8%-ஐ எட்டி உள்ளது.
இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி கண்டுள்ளது. இது சமீபத்தில் இந்தியா ‘இறந்த பொருளாதாரம்’ என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுப்பதாக அமைந்துள்ளது” என கூறியுள்ளார்.