Last Updated : 22 Aug, 2025 07:20 AM
Published : 22 Aug 2025 07:20 AM
Last Updated : 22 Aug 2025 07:20 AM

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டையும் தாண்டி, முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்சியை அடையும் வாய்ப்புள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டது.
ஆனால் இந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்தபோது, அது 6.9 சதவீதம் என காட்டுகிறது. அதனால் 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தோராயமாக 6.8 முதல் 7 சதவீதமாக இருக்கும் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. முந்தைய காலாண்டுகளை வளர்ச்சி பாதையை ஆய்வு செய்து இந்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு முழுவதும் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது. இது ரிசர்வ் வங்கியின் முழு ஆண்டு இலக்கான 6.5 சதவீதத்தை விட குறைவு. 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மற்றும் பெயரளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு இடையேயான இடைவெளி குறைவது குறித்தும் இந்த அறிக்கை ஆலோசித்தது. 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்த இடைவெளி 12 சதவீதமாக இருந்தது.
அது 2025-ம் ஆண்டு நிதியாண்டில் நான்காவது காலாண்டில் 3.4 சதவீதமாக குறைந்தது. 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த இடைவெளி மேலும் குறையும் என இந்த அறிக்கை கூறுகிறது. அதன்படி 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FOLLOW US