சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.
குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, நாள்தோறும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.
அந்த வகையில், செப்.6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.80,040 ஆகவும், செப்.9-ம் தேதி ரூ.81,200 ஆகவும், செப்.12-ம் தேதி ரூ.81,920 ஆகவும் அடுத்தடுத்து விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதாவது, பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து, ரூ.10,280-க்கு விற்கப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.89,712 ஆக இருந்தது.
இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.144 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1.44 லட்சமாகவும் இருந்தது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பண்டிகை மற்றும் குடும்ப நிகழ்ச்சிக்காக நகை வாங்க எண்ணியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை உயர்வு குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.சாந்தக் குமார் கூறுகையில், “புவிசார் அரசியலே தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, அமெரிக்க அதிபரின் வரிக் கொள்கை முக்கியமாகும். வரும் நாட்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது” என்றார்.