சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.27) மீண்டும் ஒரு பவுன் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த 23-ம் தேதி 85,000-ஐ கடந்திருந்தது. அன்றைய தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.85,120 என சந்தையில் விற்பனையானது. இது வரலாறு காணாத உச்சமாக அமைந்தது. இந்நிலையில், அதற்கடுத்த இரண்டு நாட்கள் தங்கம் விலை சற்று குறைந்தது. தொடர்ந்து நேற்றைய தினம் (செப்.26) தங்கம் விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.84,400 என விற்பனையானது.
இந்த சூழலில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,640-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.85,120-க்கு விற்பனை ஆகிறது. இதே போல 24 காரட் தங்கம் ரூ.92,856-க்கும், 18 காரட் தங்கம் ரூ.69,288-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை புதிய உச்சம்: சென்னையில் நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.153-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.6 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.159-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து, ரூ.1,59,000-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை உச்சம் ஏன்? – தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு அடுத்தபடியாக வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி, தொழில் துறையிலும் வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி அதிகளவில் வெள்ளி நகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் உள்நாட்டில் வெள்ளி நகை தயாரிப்பாளர்கள் பாதிப்பை சந்தித்ததோடு, வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வெள்ளி இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது கவனிக்கத்தக்கது.