சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.84 ஆயிரத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
கடந்த 20-ம் தேதி தங்கத்தின் விலை ரூ.82,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.83 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.83,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.23) காலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,500-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.560 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.84,000-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.149-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1,49,000-க்கு விற்பனை ஆகிறது.
“அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், வங்கியில் வைப்பு வைத்திருந்தோர் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றால், தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பு உள்ளது” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.