மதுரை: மாநகர முக்கிய சாலைகளில் விளம்பர பலகைகளை வைக்கும் விளம்பர நிறுவனங்களே, அந்த சாலைகளில் புதிய தெருவிளக்குகளை நிறுவி பராமரித்து, அதற்கான மின்கட்டணத்தையும் செலுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சியின் எல்லை 142 ச.கி.மீ-ஆக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 265 கி.மீ. பேருந்து வழித்தட சாலைகள் உட்பட மொத்தம் 1,545 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் மொத்தமே 60,000 தெருவிளக்குகள் மட்டுமே உள்ளன. அதனால் முக்கிய சாலைகள் தவிர குடியிருப்புகள், சாதாரண சாலைகளில் போதுமான தெருவிளக்குகள் இல்லை என்றும், அவற்றின் பராமரிப்பும் மோசமாக இருப்பதால் சாலைகள் இருளில் மூழ்கி நள்ளிரவு வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், 100 வார்டுகளிலும் சாலைகள், குடியிருப்புகளுக்கு தேவையான தெருவிளக்குகளை கணக்கெடுத்து, தற்போது புதிதாக 4,500 தெருவிளக்குகளை வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய தெருவிளக்குகள் வந்ததும், அவற்றை பொருத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஏற்கெனவே ரூ.3.52 கோடியில் வாங்கப்பட்ட புதிய தெருவிளக்குகளை பாத்திமா கல்லூரி முமுதல் பரவை காய்கறி மார்க்கெட் வரையும், குருவிக்காரன் சாலை முதல் விரகனூர் சந்திப்பு வரையும், இதர விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் பொருத்தும் பணி நடக்கிறது.
இந்நிலையில், மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நீடிப்பதால் முக்கிய சாலைகளில் விளம்பர பலகைகள் வைக்கும் தனியார் விளம்பர நிறுவனங்கள் மூலமே தெருவிளக்குகள் நிறுவுதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றை செய்து, அதற்கான மின்கட்டணத்தையும் அவர்களே செலுத்துவதற்கான நடவடிக்கையை ஆணையர் சித்ரா மேற்கொண்டுள்ளார்.
கடந்த காலத்தில் இந்த நடைமுறை இருந்தாலும், தெருவிளக்குகளை நிறுவுவதோடு சரி, அவர்கள் அதற்கான பராமரிப்பை செய்வதில்லை. பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கும், கட்டுமானம், சாலை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் காரணமாக அவர்களாலும் இதனை கண்காணிக்க முடியவில்லை. அதனால் ஆணையர் சித்ரா, விளம்பர நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் நகரமைப்பு பிரிவிடம் தற்போது தெருவிளக்குகளை கண்காணிக்கும் பொறுப்பையும் வழங்கியுள்ளார்.
ஒப்பந்தத்தில் சேர்த்து என்ஓசி வழங்கல்: நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “3 விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பர பலகைகள் வைப்பதற்கு கட்டணம் பெற்று நகரமைப்பு பிரிவு அனுமதி வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அவர்களுக்கு விளம்பர பலகை வைக்க அனுமதி வழங்கப்பட்ட அண்ணாநகர், கே.கே.நகர் சாலைகள், பாத்திமா கல்லூரி முதல் பழங்காநத்தம் வரையிலான சாலைகளில் புதிய தெருவிளக்குகளை நிறுவி, அதனை பராமரிக்கும் பொறுப்பும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டு ஆணையர் சித்ரா தடையில்லாச் சான்று வழங்கியுள்ளார்.
அந்த அடிப்படையிலேயே விளம்பர பலகைகளை வைப்பதற்கும் மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விளம்பர நிறுவனங்கள், அந்த சாலைகளில் புதிய தெருவிளக்குகளை அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்” என்றனர்.