சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘நாட்டிலேயே அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இதனால் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சாலை, குடிநீர், தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பேருந்து வசதி, கல்வி மற்றும் சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்க, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.
எனினும், பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதைக் காட்டிலும், பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில், ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது என்ற நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று, முதல்கட்டமாக சென்னைக்கு அருகில் ஒரு புதிய நகரம் 2,000 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதிநுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், மாநாட்டுக் கூடங்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அளி்க்கும் நிறுவனங்களும் இந்த நகரத்தில் அமைக்கப்படும். அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்கு கட்டிடங்கள் கொண்டதாகவும் இந்நகரம் அமையும்’’ என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பையடுத்து, சென்னை அருகில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், மதுராந்தகம் பகுதியில் 2,000 ஏக்கர் நிலத்தில் புதிய நகரம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதை செயல்படுத்துவதற்காக தொழில் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தை (டிட்கோ) தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, மதுராந்தகம் அருகில் புதிய சர்வதேச நகரத்தை உருவாக்குவதற்கான பெருந்திட்ட அறிக்கையை (மாஸ்டர் பிளான்) தயாரிப்பதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.