கோவை மாநகரைத் தொடர்ந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் அறிக்கை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் ‘ட்ரோன் சர்வே’ நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு நகரின் அடுத்த 40 வருட வளர்ச்சியை கருத்தில்கொண்டு ‘மாஸ்டர் பிளான்’ (முழுமைத் திட்டம்) தயாரிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த போக்குவரத்து, தொழிற்சாலை வழித்தடம், பசுமை மற்றும் நீர்நிலை கட்டமைப்புகள், பொருளாதார திட்டமிடல், உள்வட்ட சுற்றுச்சாலைகள், நகர்ப்புற வனவியல், வளர்ச்சிக்கான நில உபயோகங்கள், திட்ட சாலைகள் ஆகியவற்றின் நில விவரங்கள் சர்வே எண்ணுடன் மாஸ்டர் பிளானில் இடம் பெறும்.
கோவை மாநகருக்கான மாஸ்டர் பிளான் கடந்த 1994-ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் 29 வருடங்கள் கழித்து, 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான ‘கோவை மாஸ்டர் பிளான்’ அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்புப் பணியையும் விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா.லோகு கூறும்போது,”பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் நகரங்கள் கோவையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இங்கு பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கோவை மாவட்ட நகர ஊரமைப்புத் துறை, உள்ளூர் திட்டக் குழுமம் ஆகியவற்றின் சார்பில், கடந்த 2005-ம் ஆண்டு பொள்ளாச்சி, 2006-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் ஆகிய நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர், கிட்டத்தட்ட 19 ஆண்டுகளை கடந்தும் மேற்கண்ட நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் புதுப்பிக்கப்படவில்லை. இந்நகரங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், மாஸ்டர் பிளான் தயாரிப்புப் பணியை விரைவில் முடித்து வெளியிட வேண்டும்” என்றார்.
கோவை நகர ஊரமைப்புத் துறை உயர் அதிகாரி கூறும்போது, ”கடந்த முறை பொள்ளாச்சிக்கான மாஸ்டர் பிளான் 13.86 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், மேட்டுப்பாளையத்துக்கான மாஸ்டர் பிளான் 7.20 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் தயாரித்து வெளியிடப்பட்டது. மேற்கண்ட நகரங்களுக்கான இரண்டாவது மாஸ்டர் பிளான் அறிக்கை தயாரிப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தேர்வு செய்யப்பட்ட வல்லுநர்கள் மூலம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களில் ட்ரோன் மூலம் சர்வே செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிக்கையை அவர்கள் எங்களிடம் வழங்குவர். அதை சரிபார்க்க நேரடி சர்வேயும் செய்வோம்.
இதைத் தொடர்ந்து ஏரியாக்கள், சர்வே எண்கள், சாலைகள், குடியிருப்புக் கட்டிடங்கள், தொழில் கட்டிடங்கள், நிலங்களின் வகைப்பாடு போன்ற விவரங்கள் இறுதி செய்யப்படும். இதற்கான ஆரம்பக்கட்ட வரைபடம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக இறுதி செய்யப்படும். இந்த நகரங்களுடன் இணைக்கப்படும் பகுதிகள், மொத்த சதுரகிலோ மீட்டர் விவரங்கள் அடுத்த சில வாரங்களில் தெரியவரும். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மாஸ்டர் பிளான் அறிக்கைக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதே சமயம் விரைவாக தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.