ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில் பயிர்க்கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 144 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க ஆடு வளர்ப்பு, கறவை மாடு, கரி மூட்டத் தொழில், மகளிர் சுய உதவிக்குழு, பயிர்க் கடன் போன்ற பல்வேறு கடன்கள் வட்டியில்லாமல் ஓராண்டுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட கால தவணைக்குள் கடனை திரும்ப செலுத்தினால் மாநில அரசே அந்த அசலுக்குரிய வட்டியை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகிறது. ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு புரட்டாசி ராபி பருவத்தில் சுமார் ரூ.160 லட்சம் வரை பிணையமின்றியும், அடமானமின்றியும் ஓராண்டுக்கு வட்டியில்லாமல் வழங்குகிறது. இந்த பயிர் கடனை கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் வெளி நபர்களிடமும், தனியாரிடமும், தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிடமும் விவசாயத்துக்காக பெறக்கூடிய கடன் முற்றிலும் குறைந்து வந்தது.
இந்நிலையில், இந்தாண்டு ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு நடப்பாண்டு பசலி (சாகுபடி) வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிப்பதால், கடன் பெறுவதில் சிக்கல் உருவாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு பயனளிக்காது: இதுகுறித்து, கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: தற்போது புரட்டாசி ராபி பருவம் தொடங்கி விட்டதால் பயிர்க்கடன் பெறுவதற்கான ஆவணங்களை விவசாயிகள் சேகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வரை முந்தைய ஆண்டு பயிர் அடங்கல் பசலி (சாகுபடி) மூலம் நடப்பாண்டுக்கு தேவையான பயிர்க் கடனை பெற்று வந்தனர். ஆனால், தற்போது முந்தைய ஆண்டு பயிர் அடங்கல் பசலி மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கக்கூடாது. நடப்பாண்டுக்கு உரிய பசலியை பெற்றே கடன் வழங்கப்படும் என, கூட்டுறவு கடன் சங்கங்கள் கூறுகின்றன. இதனால், விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கு உரிய பசலி என்பது அக்டோபர் மாத இறுதியில் இருந்து நவம்பர் மாதம் வரை வழங்கப்படுவது வழக்கம். பயிர்க்கடன் பெற வேண்டுமென்றால் விவசாயிகள் அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சாகுபடி என்பது செப்டம்பர் மாதம் பிற்பகுதியில் இருந்து தொடங்கி விடுகிறது. சாகுபடி சமயத்தில் தர வேண்டிய பயிர்க் கடனை 2 மாதங்களுக்கு பின்னர் வழங்கினால் விவசாயிகளுக்கு எந்த பயனையும் அளிக்காது.
ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்: இதற்கிடையே, அடமானமின்றி வழங்கப்பட்ட ரூ.1.60 லட்சத்தை ரூ.3 லட்சம் என உயர்த்தி அறிவித்த அரசு, நடப்பாண்டிலேயே செயல்படுத்தப் படும் எனவும் தெரிவித்தது. ஆனால், நடப்பாண்டிலும் அதற்கான உத்தரவு தற்போது வரை வரவில்லையெனற கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் ரூ.1.60 லட்சம் வரை அடமானமின்றி வழங்கப்படும் கடனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கிக் கொள்ளலாம் எனவும், ஆனால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களே ஏற்றுக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சட்டப்பேரவை தேர்தல் விரைவில் வர உள்ளதால், பயிர்க்கடன் தள்ளுபடி என அரசு அறிவித்துவிட்டால் முந்தைய ஆண்டு பசலி மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதில் சிக்கல் உருவாகலாம் என, அதிகாரிகள் உஷாராக புதிய பசலி மூலமே கடன் வழங்க வேண்டும் என கறாராக தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பயிர்க்கடன் வழங்குவதில் வழக்கமான நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். கடன் தொகையை ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.