மும்பை: ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 2 ஆகக் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் நேற்று வர்த்தகத்தின் இடையே 1,000 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து வந்தன.
இந்நிலையில், சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் விடுமுறைக்குப் பிறகு நேற்று காலையில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 350 புள்ளிகள் வரை உயர்ந்து 25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.
எனினும், பிற்பகலில் பங்குச் சந்தைகள் சற்று இறக்கத்தை சந்தித்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 676 புள்ளிகள் உயர்ந்து 81,274-ல் முடிந்தது. நிப்டி 245 புள்ளிகள் உயர்ந்து 24,877-ல் நிலை பெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறை தவிர வாகனம், ரியல் எஸ்டேட், உலோகம் உட்பட் அனைத்து துறைகளின் குறியீட்டெண்களும் கணிசமாக உயர்ந்தன. சிறு நிறுவனங்கள் குறியீட்டெண் (1.14%), நடுத்தர நிறுவனங்கள் குறியீட்டெண் (1.43%) ஆகியவையும் உயர்ந்தன.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி வரி விதிகம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார். இதனால், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகனத் துறை பங்குகள் நேற்று கணிசமாக உயர்ந்தன.
மோடி தலைமையில் ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கட்டமைப்பில் தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன. இதை 5%, 18% என இரு அடுக்கு வரி விகிதங்களாக மாற்றுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.