சென்னை: டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட பிஎல்எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.711 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 44% அதிகம் ஆகும். இதுபோல வட்டி, வரிகள், தேய்மானத்துக்கு முந்தைய வருவாய் (ஈபிஐடிடிஏ) 53% உயர்ந்து ரூ.204 கோடியை எட்டியுள்ளது. நிகர லாபம் ரூ.181 கோடியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 50% அதிகம் ஆகும்.
கடந்த 2005-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்நிறுவனம், பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு விசா மற்றும் தூதரக சேவைகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள், குடியுரிமை, குடியிருப்பு சேவைகளை வழங்குகிறது. மேலும் அதன் துணை நிறுவனமான பிஎல்எஸ் இ-சர்வீசஸ் மூலம் குடிமக்கள் சேவைகளும் வழங்கப்படுகின்றன. 46-க்கும் மேற்பட்ட அரசாங்க வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவை மையங்களைக் கொண்டு இயங்கி வருகிறது.