புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல் – ஜூன்) 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்சன் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ரூ.21,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2024-25-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.17,280 கோடியுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் வசூலான மொத்த தொகையில் 80 சதவீதம் அதாவது ரூ.17,000 கோடி தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டது ஆகும். இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “கூடுதல் நெடுஞ்சாலைப் பகுதிகள் சுங்க வரியின் கீழ் கொண்டுவரப்பட்டதும், பயனர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டதும் சுங்க கட்டண வசூல் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய போக்கு நீடிக்கும்பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பிற சாலை ஒப்பந்த உரிமையாளர் நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது அரசு சமீபத்தில் அறிவித்த வருடாந்திர டோல் பாஸ் திட்டத்தை தனியார் கார் உரிமையாளர்கள் எந்த அளவுக்கு தேர்வு செய்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.
200 சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்கான வருடாந்திர டோல் பாஸ் கட்டணம் ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.