புதுடெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாஸ்டேக் ஆண்டு சந்தா அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கடந்த 2019-ல் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக கடந்த 2021-ம் ஆண்டில் இது கட்டாயமாக்கப்பட் டது. இதன்மூலம் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது குறைந்துள்ளது. ஊழியர்களிடம் தகராறு, சில்லறை பிரச்சினை போன்றவற்றுக்கும் தீர்வு காணப்பட்டது.
இந்நிலையில், சுங்கச் சாவடிகளில் பயணத்தை எளிமைப்படுத்தவும், மலிவு கட்டணத்தில் சுங்கச் சாவடிகளை கடந்து செல்லவும் பாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
இதையடுத்து, வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று பாஸ்டேக் ஆண்டு சந்தா (பாஸ்) அறிமுகமாகிறது. ஒருமுறை ரூ.3,000 செலுத்தி ஆண்டு சந்தா பெற வேண்டும். இந்த சந்தா முறையில் சேர்ந்தால் 200 முறை சுங்கச் சாவடிகளை கடந்து செல்லலாம். அல்லது ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆண்டு சந்தா பெறுவதற்காக ‘ராஜ்மார்க் யாத்ரா’ செயலி அல்லது NHAI/MoRTH என்ற இணையதளத்தில், வாகனத்தின் எண், பாஸ்டேக் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் யுபிஐ பயன்படுத்தி ரூ.3,000 செலுத்தினால், ஆண்டு சந்தா உங்கள் பாஸ்டேக்குடன் இணைக்கப்பட்டுவிடும். அதை உறுதி செய்வதற்கான குறுஞ்செய்தி மொபைல் எண்ணுக்கு வரும்.
ஆண்டு சந்தா முடிந்துவிட்டால், தானாகவே மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாது. மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். கார், ஜீப், வேன் வைத்திருப்பவர்கள், அடிக்கடி சுங்கச் சாவடிகளை கடந்து செல்பவர்களுக்கு ஆண்டு சந்தா பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.