திருச்சி: தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் பிரியாணிக்கு மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சன்ன ரக சீரக சம்பா அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.200-ஐ எட்டியுள்ளது. தமிழகத்தில் மிகப் பெரும் பாலானோர் நமது பாரம்பரிய அரிசி ரகங்களில் ஒன்றான சீரக சம்பா அரிசியை பிரியாணி சமைக்க பயன்படுத்தி வருகின்றனர். சம்பா பருவத்தில் பயிரிடப்படும் இந்த அரிசி, மருத்துவ பண்புகளும், நல்ல சுவையும் கொண்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சீரக சம்பா அரிசி பரவலாகபயிரிடப்படுகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொப்பம்பட்டி பகுதியில் விளையும் சீரக சம்பா அரிசி ரகம், பிரியாணியின் சுவையையும், நறுமணத்தையும் அதிகரித்துக் கொடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளதால் மவுசு அதிகம்.
சம்பா பருவத்தில் மட்டுமே பயிரிடப்படக் கூடிய இந்த நெல் ரகத்தின் அறுவடைக் காலம் நான்கரை மாதங்கள். இதர ரக நெல்லை விட மகசூல் பாதியாக இருப்பதாலும், உற்பத்தி செலவு காரணமாகவும் விலை எப்போதும் சற்று அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் சீரக சம்பா அரிசியின் விலை கிலோ ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து திருச்சி மாவட்ட அரிசி வியாபாரிகள் கூறியது: தமிழக மக்களிடம் பிரியாணிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், சீரக சம்பா அரிசியின் தேவையும், விலையும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் கடந்த சில ஆண்டுகளாக சீரக சம்பா அரிசியை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த ஆண்டு வரத்து அதிகரித்து கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையானது. இந்த விலை சீரக சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகவில்லை. இதனால், முந்தைய ஆண்டுகளில் சீரக சம்பா பயிரிடுவதில் ஆர்வம் காட்டிய விவசாயிகள், கடந்த ஆண்டு சீரக சம்பா நெல்ரகத்தை பயிரிடவில்லை. இதனால், நிகழாண்டு சீரக சம்பா ரகம் உற்பத்தி, வரத்து குறைந்து சந்தையில் டிமாண்ட் உருவாகி, கடந்தசில நாட்களாக கிலோ ரூ.200-க்கு விற்பனையாகிறது.
இதனால் சாமானிய மக்கள், சீரக சம்பா அரிசிக்கு மாற்றாக விலை குறைந்த மற்றொரு சன்ன ரக அரிசியான கிலோ ரூ.80-க்கு விற்பனையாகும் துளசி ரக அரிசியை பிரியாணி சமைக்கப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிகழாண்டு பரவலாக விவசாயிகள் பலரும் சீரக சம்பா நெல் பயிரிட்டுள்ளனர்.
இது, ஜனவரி மாதம் அரிசியாகி சந்தைக்கு விற்பனைக்கு வரும். அதன்பிறகு விலை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் சீரக சம்பா நெல் அறுவடை, நவம்பர் மாதம் தொடங்கிவிடும். அப்போது அங்கிருந்தும் தமிழகத்துக்கு அரிசி வரத் தொடங்கும்போது, தமிழகத்தில் சீரக சம்பா அரிசி விலை குறையத் தொடங்கிவிடும் என்றார்.