சென்னை: ஸ்டார்ட்-அப் சிங்கம் 2-வது சீசன் நிதி திரட்டல் நிகழ்ச்சிக்காக, ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் தொழிலதிபர்கள் சிலர் இணைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக ‘ஸ்டார்ட்-அப் சிங்கம்’ என்ற பெயரில் ஸ்டார்ட்-அப் ரியாலிட்டி ஷோவை பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் நடத்தியது. இது விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. தொழில்முனைவோர் தங்கள் புதிய தயாரிப்புகள் பற்றி எடுத்துரைத்து நிதி திரட்டவும் சந்தை வாய்ப்பை பெறவும் இந்நிகழ்ச்சி வாய்ப்பாக அமைந்தது.
பாலசந்தர் மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் இணைந்து நடத்தும் இந்நிறுவனம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டுவோரை இணைக்கும் பாலமாக விளங்குகிறது.
இதில் தலைமை ஆலோசகராக குமார் வேம்பு செயல்படுகிறார். ஸ்டார்ட்-அப் சிங்கம் முதல் சீசனில் 35 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ரூ.40 கோடி முதலீட்டுகான உறுதிமொழியைப் பெற்றன. இதில் ரூ.13 கோடியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற்றுவிட்டன.
தமிழ்நாட்டின் தொழில் முனைவு இயக்கத்தில் ஸ்டார்ட்-அப் சிங்கம் ஒரு கேம் சேஞ்சர் ஆக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது சீசனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர் ஆலோசகர்களாகவும் முதலீட்டாளர்களாக இணைந்துள்ளதாக சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பான்ஹெம் வென்ச்சர்ஸ் அறிவித்தது. நாடு முழுவதிலுமிருந்து பெறப்பட்ட 2 ஆயிரம் விண்ணப்பங்களில் இருந்து 75 ஸ்டார்ட்-அப்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு ரூ.100 கோடி முதலீட்டு உறுதிமொழி கிடைத்துள்ளதாகவும் பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனர் பாலச்சந்தர் தெரிவித்தார்.
டிவிஎஸ் கேப்பிட்டல் பண்ட்ஸ் தலைவர் கோபால் னிவாசன், பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரீஷ் மாத்ருபூதம், காரட்லேன் நிறுவனர் மிதுன் சச்சேதி, டிஎஸ்எம் குழும நிறுவனங்களின் இயக்குநர் கே.மகாலிங்கம், இப்போபே தலைமை நிர்வாக அதிகாரி மோகன் கருப்பையா, ஐதாட் பைனான்சியல் கல்சல்டிங் நிறுவனர் ஷ்யாம் சேகர், மேட் ஸ்டீர்ட் டென் நிறுவனர் அஷ்வினி அசோகன், எம்2பி பின்டெக் மதுசூதனன் ரங்கராஜன் ஆகியோர் முதலீட்டாளர்களாகவும் ஆலோசகராகவும் இணைந்துள்ளனர்.
ஸ்டார்ட்-அப் சிங்கம் 2-வது சீசன் நிகழ்ச்சி ஜனவரி மாதம் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் என ஹேமச்சந்திரன் தெரிவித்தார்