புதுடெல்லி: பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல் முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்த மதிப்பு ரூ.79,071 கோடியாக இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது 90% அதிரடியான வளர்ச்சியைக் குறிக்கிறது.
இந்த மைல்கல்லை அடைவதில் பங்கு வகித்த பாதுகாப்பு உற்பத்தித் துறை, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை வலுவடைந்து வருவதற்கான தெளிவான அம்சமாக இந்த வளர்ச்சியை அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மொத்த உற்பத்தியில் தோராயமாக 77% பங்களித்தன. அதே நேரத்தில் தனியார் துறை 23% பங்களித்தது. 2023-24 நிதியாண்டில் 21% ஆக இருந்த தனியார் துறையின் பங்கு, 2024-25 நிதியாண்டில் 23% ஆக அதிகரித்தது. நாட்டின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தனியார் தறையின் பங்களிப்பு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு கொள்கை சீர்திருத்தங்கள், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் உள்நாட்டுமயமாக்கலில் உத்திசார் நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக தொழில்துறையின் பொது மற்றும் தனியார் பிரிவுகள் இரண்டும் ஆண்டுக்கு ஆண்டு நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளன. 2024-25 நிதியாண்டில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி முறையே 16% மற்றும் 28% அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாதுகாப்பு உற்பத்தியில் சுயசார்பு நிலையை எட்ட அரசு மேற்கொண்டு வரும் முயற்சியின் சான்றாக இந்த சாதனை திகழ்கிறது. இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், ஏற்றுமதி திறனை வலுப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பலன்கள் கிடைத்துள்ளன.
2024-25 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதிகள் ரூ.23,622 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023-24 நிதியாண்டி,க ரூ.21,083 கோடியாக இருந்ததை விட ரூ.2,539 கோடி அதிகம். அதாவது 12.04% வளர்ச்சி. நிலையான கொள்கை ஆதரவு, அதிகரித்த தனியார் பங்கேற்பு மற்றும் விரிவாக்கப்பட்ட ஏற்றுமதி திறன்களுடன், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் துறை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.