புதுடெல்லி: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வருகிறது. அந்த நிறுவனம் சார்பில் கோவா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் மற்றும் லைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சுரங்கங்கள் உள்ளன.
இந்த சூழலில் 2024-25-ம் நிதியாண்டில் பல்வேறு கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை விவரங்களை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதன்படி அந்த நிறுவனம் சார்பில் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாஜகவுக்கு ரூ.26 கோடி மட்டுமே நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதன்படி பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்ந்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த பிரதான எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளத்துக்கு வேதாந்தா நிறுவனம் சார்பில் ரூ.25 கோடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ரூ.20 கோடி, காங்கிரஸுக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டில் காங்கிரஸுக்கு ரூ.49 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் ரூ.10 கோடி மட்டுமே நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வேதாந்தா நிறுவனம் சார்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ.457 கோடி வழங்கப்பட்டுள்ளது.