மும்பை: இந்தியாவில் புதன்கிழமை (அக்.8) அன்று பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் மூலம் யுபிஐ பேமென்ட்டை பயனர்கள் மேற்கொள்ளும் அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் பயனர்களுக்கு யுபிஐ பேமென்ட்டை மேலும் எளிதானதாக மாற்றும் வகையில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷனை புதன்கிழமை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அரசு வசம் உள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் ஃபேசியல் அங்கீகாரம் மூலம் பயனர்கள் யுபிஐ பேமென்ட் மேற்கொள்ளலாம் என தகவல்.
தற்போது உள்ள யுபிஐ பேமென்ட் முறையில் PIN-களை உள்ளிட்ட வேண்டி உள்ளது. பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் நடைமுறைக்கு வருவதன் மூலம் யுபிஐ பேமென்ட்டை பயனர்கள் விரைந்து மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.