கோவை: ஜவுளி தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனைத்து வகையான பஞ்சுக்கும் 11 சதவீத இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பருத்தியை மையமாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்துறை சுமார் 35 மில்லி யன் மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. முக்கிய மூலப்பொருளான பஞ்சு பற்றாக்குறையை சமாளிக்க உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தது. தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 31-ம் தேதி வரை சலுகை நீட்டிக்கப்பட்டது.
2024-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி முதல் நீண்ட இழை பருத்திக்கு மட்டும் வரியில் இருந்து விலக்கு அளித்தது. அனைத்து வகையான பஞ்சுக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வரி விலக்கு அளிக்க தொழில் அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. இதற்கு பல்வேறு தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் எஸ்.கே.சுந்தரராமன் கூறும்போது, “நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உதவிய பிரதமர், நிதியமைச்சர், ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. இக்கோரிக்கையை பரிந்துரைத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி.
பஞ்சு தேவையில் தன்னிறைவு நிலையை இந்தியா அடைவதற்க்கு 5–7 ஆண்டுகள் தேவைப்படும். மேலும் 2030-ம் ஆண்டிற்குள் இந்திய நூல் மற்றும் துணி ஏற்றுமதியை 37 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 100 பில்லியனாக அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை அடைய உலக விலை யில் தடையற்ற மூலப்பொருட்கள் பெறுவது மிக அவசியம்” என்றார்.
இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் டி.ராஜ்குமார் கூறும்போது, “சிட்டி, சைமா அமைப்புகள் கடந்த சில ஆண்டு களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இன்று இந்திய பஞ்சை விட சர்வேதச பஞ்சு 15 சதவீதம் விலை குறைவாக கிடைக்கிறது.
இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதிக்கு மேற்குறிப்பிட்ட விலை வித்தியாசம் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மத்திய அரசின் நடவடிக்கை ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மிகவும் உதவும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
தென்னிந்திய மில்கள் சங்க முன்னாள் தலைவர் ரவிசாம் கூறும்போது, “ஆண்டுதோறும் சீசன் அல்லாத காலங்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை அனைத்து விதமான பஞ்சுக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது” என்றார்.
இந்திய பருத்தி கூட்டமைப்பின் (ஐசிஎப்) தலைவர் துளசிதரன் கூறும்போது, “நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. மத்திய அரசு அடிக்கடி திட்டங்களை மாற்றி வருகிறது. நீண்ட கால திட்டமாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இதனால் தொழில் துறையினர் திட்டமிட்டு செயல்பட மிகவும் உதவிகரமாக அமையும். தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு ஜூன் மாதம் அறிவித்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்” என்றார்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “இவ்வாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பாலியஸ்டர், விஸ்கோஸ் ஆகிய செயற்கை இழைகளும் தேவையான அளவு தடையின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.