புதுடெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் (WPI) ஆகஸ்ட் மாதத்தில் 0.52% ஆக உயர்ந்தது. உணவு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், மொத்தவிலை பணவீக்கமும் உயர்ந்தது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விலை பணவீக்கம் ஜூலை -0.58 ஆகவும், ஜூன் மாதத்தில் -0.19% ஆகவும் இருந்தது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.25% ஆக இருந்தது. அதுவே இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.52% ஆக உயர்ந்துள்ளது.
மொத்த விலை பணவீக்கம் குறித்து தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆகஸ்ட் 2025 இல் முதன்மையாக உணவுப் பொருட்கள், உற்பத்தி, உணவு அல்லாத பொருட்கள், உலோகம் அல்லாத கனிமப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் போன்றவற்றின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பால் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் எதிர்மறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 3.06% ஆக இருந்தது, அது ஜூலை மாதத்தில் 6.29% ஆக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் காய்கறிகளின் எதிர்மறை பணவீக்கம் 14.18% ஆக இருந்தது, இது ஜூலை மாதத்தில் 28.96% ஆக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரத் துறையில் ஜூலை மாதத்தில் 2.43% ஆக இருந்த எதிர்மறை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 3.17% ஆக இருந்தது.