தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து முதல் கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இதற்காக தூத்துக்குடி அருகே சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மின்சார கார் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024 பிப்ரவரி 25-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் வியட்நாம் நாட்டில் உள்ள தங்கள் தொழிற்சாலையில் இருந்து அனைத்து உதிரி பாகங்களையும் இங்கே கொண்டு வந்து, தூத்துக்குடி ஆலையில் ஒருங்கிணைத்து மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
முதல் கட்டமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் வி.எப் 6, வி.எப் 7 வகை மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முதல் கட்ட உற்பத்திக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா வரும் 31-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுவதாகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்து, முதல் கார் விற்பனையை தொடங்கி வைப்பதாகவும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், காணொலி காட்சி மூலம் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைப்பார் என மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல் கட்டமாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் வி.எப் 6, வி.எப் 7 வகை மின்சார கார்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறது. இதற்காக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், கார் விற்பனைக்கான முன்பதிவை கடந்த மாதம் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தொடங்கியது. இந்நிறுவனம் அடுத்தகட்டமாக அனைத்து பாகங்களையும் தூத்துக்குடி தொழிற்சாலையிலேயே தயாரித்து, இங்கேயே மின்சார கார்களை முழுமையாக உற்பத்தி செய்யவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.