திருச்சி: திருச்சியில் வீடுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்வதற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சுமார் 25 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
அத்துடன் நுகர்வோரிடம், சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
தற்போது, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, திருச்சியில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் யூனிட்டிலிருந்து குழாய் மூலம் வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவெறும்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியில் 50 குழுக்களை சேர்ந்த 500-க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக திருவெறும்பூர் காட்டூரில் சில வீடுகளுக்கு காஸ் இணைப்பு சோதனை முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், கால, பண விரயம் இருக்காது என்பதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அனைத்தும் ஆன்லைன் குழாய் மூலம் இணைப்பு பெறுபவர்கள் முழுக்க முழுக்க செல்போன் செயலி மூலம் தங்களது சேவையை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கட்டணம் செலுத்துவது, புகார்கள் தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இந்த செயலி மூலம் வழங்கப்படுகிறது.
எல்பிஜி, பிஎன்ஜி என்ன வித்தியாசம்? – வழக்கமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரில் இயற்கையாக பெறப்படும் ‘எல்பிஜி’ எனப்படும் நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலியம் காஸ் இருக்கும். ஆனால், தற்போது குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயு ‘பிஎன்ஜி’ எனப்படும் இயற்கை எரிவாயு. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் இந்த எரிவாயு பாதுகாப்பானது. எல்பிஜி அடர்த்தியானது; பிஎன்ஜி அடர்த்தி குறைந்தது; மிகவும் பாதுகாப்பானது.
எல்பிஜி கசிந்தால், தரைப்பகுதியோடு ஒட்டி இருக்கும். ஆனால், பிஎன்ஜி காற்றில் கலந்து எளிதில் வெளியேறிவிடும். இதனால் விபத்து அச்சம் இல்லை. வழக்கமாக வீடுகளில் பயன்படுத்தும் அடுப்புகளிலேயே இதை பயன்படுத்தி சமைக்கலாம். எல்பிஜியில் பயன்படுத்தும் காஸ் எடைக்கு பணம் செலுத்துகிறோம். ஆனால், பிஎன்ஜியில் செலவழிக்கும் சக்திக்கு ஏற்ப பணம் செலுத்தினால் போதுமானது. மின்கட்டணத்தை, மீட்டர் கணக்கிட்டு செலுத்துவதைப் போலவே, இதற்கும் செலுத்தலாம்.