சென்னை: அன்றாடம் காலை 10 மணிக்கு அதிரடி தலைப்புச் செய்தியாக இருக்கிறது தங்கம், வெள்ளி விலை நிலவரம். முன்பெல்லாம் தங்கம் விலையோடு எப்போதாவது சேர்ந்துவரும் ‘வரலாறு காணாத புதிய உச்சம்’ என்ற வர்ணனை இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இதனால், தங்கம் பலருக்கும் எட்டாக்கனியாகி வருகிறது.
தங்கத்தை அதிகமாக நுகரும் / கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகளில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலியை தொடர்ந்து இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. ஏழை, நடுத்தர மக்களின் அவசரத் தேவைக்கு ஆபத்பாந்தவன் என்பதால் அவரவர் வாங்கும் சக்திக்கு ஏற்ப தங்கம் வாங்கிக் கொள்வது இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் முதன்மையாக உள்ளது.
2025 ஜனவரி 1-ம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் விற்பனை ஆன நிலையில், இந்தக் கட்டுரையைப் பதிவிட்ட செப்.12 இரவு 8 மணி நேரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,240-க்கும், ஒரு பவுன் ரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.142-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் இனி பண்டிகை காலம் என்பதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. தங்கம் விலையின் தொடர் உயர்வுக்கு என்னதான் காரணம், தங்கத்தின் மீது இனியும் முதலீடு செய்யலாமா, எதிர்காலத்தில் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பன போன்ற பல்வேறு கேள்விகளையும் சென்னை தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் ‘கோல்டு குரு’ சாந்தகுமாரிடம் வைத்தோம். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் வருமாறு:
தங்கம் தொடர்ந்து விலை உயர்வதற்குக் காரணம் என்ன? – “தங்கம் விலை எப்போதுமே சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்பவே மாற்றம் காணும். உலகப் பொருளாதார போக்குகள், போர் நிலவரங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, சூப்பர் பவர் நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் என பல விஷயங்கள் தங்கம் விலையை நிர்ணயிக்கின்றன.
அந்த வகையில் 2025-ல் இஸ்ரேல் – காசா போர், அமெரிக்காவுக்கு புதிய அதிபர் தேர்வானது, ட்ரம்ப்பின் இறக்குமதி வரி விதிப்பு, இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எனப் பல்வேறு நிகழ்வுகளும் நடந்துள்ளன. கூடவே 3 ஆண்டுகளாகத் தொடரும் ரஷ்யா – உக்ரைன் போர் வேறு. இந்த மாதிரியான அசாதாரண சூழல்களின் போது உலக நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை கணிசமாக அதிகரிக்கும். முன்பெல்லாம் இதுபோன்ற அசாதாரண சூழல்கள் எப்போதாவது ஏற்படும், ஆனால் இப்போதைய உலகில் அடிக்கடி ஆயுத, வர்த்தகப் போர்ப் பதற்றங்கள் ஏற்படுவதால் இந்த விலையுயர்வும் அடிக்கடி நிகழ்கிறது.”
தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? – “இப்போதைய சர்வதேச சூழலை வைத்துப் பார்த்தால், இந்த டிசம்பர் இறுதிக்குள் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சம் வரை எட்டக் கூடும். வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.250 வரை அதிகரிக்கும்.”
விண்ணை முட்டும் அளவுக்கு விலையுயர்ந்த நிலையில் தங்கத்தின் மீது முதலீடு செய்யலாமா? – “தங்கம் மீது நிச்சயமாக முதலீடு செய்யலாம். தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதும் அதன் விலை அதிகரிக்க ஒரு காரணம். அதனால் அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கத்தின் மீது முதலீடு செய்வது எதிர்காலத்தில் லாபகரமானதாகவே இருக்கும். இந்தியச் சூழ்நிலையைப் பொறுத்தவரை, ஒரு நடுத்தர வருமானம் கொண்ட குடும்பம் குறைந்தது 25 பவுன் தங்கம் வைத்துக் கொள்வது அவர்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பானதே.”
தங்கம் விலையுயர்வு வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? – “நிச்சயமாக. தங்கம் விலை உயர்ந்து வருவதால், முன்பைவிட அதிக முதலீடு செய்துதான் வியாபாரிகள் தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும். தங்கம் விலை என்னவாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அளவைக் குறைத்துக் கொண்டாலும் கூட வாங்க வருகிறார்கள் என்றாலும், அதன் மீதான முதலீடு அதிகரித்துள்ளது வியாபாரிகளுக்கு சிறிய பின்னடைவுதான்.”

தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியில் முதலீடு செய்யலாமா? – “நிச்சயமாக தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியிலும் தாராளமாக முதலீடு செய்யலாம். ஆபரணம், அலங்கார, பூஜை பொருட்களைத் தாண்டி தொழிற்சாலைகளிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. அதனால் வசதிக்கேற்ப வெள்ளியிலும் முதலீடு செய்யலாம். தங்கத்தைப் போல் வெள்ளி இடிஎஃப் இருக்கிறது. அதில் கூட மக்கள் முதலீடு செய்யலாம்.”
இப்படியே விலையுயர்ந்தால் தங்கத்தை வாங்குவது எப்படி? – “தங்கம் விலை எகிறினாலும், இந்திய மக்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஈடுபாடு ஒருபோதும் குறையாது. அதேபோல், முன்பை ஒப்பிடுகையில் மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. எனவே, தங்கம் வாங்கும் போக்கு தொடரும் என்பதில் ஐயமில்லை” என்றார்.
ஆக, தற்போதைய சூழலில், சுப காரியங்கள் தவிர்த்து முதலீடு என்று வரும்போது, தனிப்பட்ட முறையில் நிபுணர்களின் ஆலோசனைப் பெறுவது நல்லது என்பதையும் மனதில் கொள்ளலாம். ஒரு பவுன் தங்க நகை செய்கூலி, சேதாரத்தோடு இப்பவே ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில், ஏழை குடும்பத்துக்கு குண்டுமணி தங்கம் கூட கனாதான். நடுத்தரக் குடும்பங்களுக்கு தங்கம் எட்டாக்கனி தான். விலைவாசி உயர்வு ஒருபுறம் இருக்க, ஊதிய உயர்வு கிணற்றில் போட்ட கல்லாகத் தான் நடுத்தர வர்க்க குடும்பங்களின் வருமானம் ஈட்டுவோருக்கு இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வால் நிச்சயமாக அவர்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்று சமூக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
புவி அரசியல் பதற்றங்கள் நீங்கி, அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானதாகவும், சர்வதேச பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மையும் ஏற்படும்போது தங்கம் விலை அன்றாட உயர்வைக் காண்பது வேண்டுமானாலும் குறையுமே தவிர இனி தடாலடியாகக் குறையும் என்று நினைப்பதெல்லாம் பகல் கனவு என்றும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.