சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 அதிகரித்து, மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜூலை 23-ம் தேதி ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.74,960-க்கும், கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.9,370-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.81,768-க்குவிற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. தற்போது பவுன் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் நகை வாங்குவோர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
இதேபோல, வெள்ளியும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.125-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.80-ஆக சரிந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறும் என்பதால் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்புள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் கிராம் ரூ.10 ஆயிரத்தை எட்டக்கூடும்” என்றார்.