சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்தஒரு பவுன் ஆபரணத் தங்கம், செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலைஉயர்வுக்கு முக்கியக்காரணமாக அமைந்தன. இதன்பிறகு, இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை உயர்ந்தது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து, ரூ.10,640-க்கு விற்கப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.92,856 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.159 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6,000 அதிகரித்து ரூ.1,59,000 ஆகவும் இருந்தது. வெள்ளி இறக்குமதிக்கு தடை, வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொழில் துறையில் வெள்ளி தேவை உயர்வு ஆகியவை வெள்ளி விலை வரலாறு காணாக வகையில் உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.