சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதல்முறையாக, ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஆபரணத் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறை அறிவிப்பு, ஈரான் மீதான போர் அச்சுறுத்தல் ஆகியவற்றால் கடந்த ஏப். 22-ல் தங்கம் விலை ரூ.74,320-ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பின்னர், இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் ஜூன் 14-ல் ரூ.74,560 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
கடந்த 18-ம் தேதிக்கு பிறகு தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை மேலும் உயரும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஆபரணத் தங்கம் நேற்று ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது.
சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.9,380-க்கு விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,160 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 24 காரட் சுத்த தங்கம் நேற்று ரூ.81,856-க்கு விற்பனையானது. இதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.129-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 29 ஆயிரமாகவும் இருந்தது. தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.சாந்தக்குமார் கூறும்போது, “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் விலை உயர்வு ஆகியவையே தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும். சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் கடந்த வாரம் 3,300 டாலராக இருந்தது. இது தற்போது 3,439 டாலராக உயர்துள்ளது. பெரு முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எனவே, வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளது” என்றார்.