சென்னை: தங்கம் விலை நேற்று (ஜூலை 23) ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை மேலும் உயரும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்த நிலையில், ஆபரணத் தங்கம் நேற்று ரூ.75 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.9,380-க்கு விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,160 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை பவுனுக்கு சென்னையில் ரூ.1000 குறைந்து ரூ.74,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.125 குறைந்து ரூ.9,255-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.128-க்கும், ஒரு கிலோ ரூ.1,28,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.1000 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.