சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.29) மீண்டும் ஒரு பவுன் ரூ.75,760 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி இந்த விலையில் ஒரு பவுன் தங்கம் விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அதே விலையைத் தொட்டுள்ளது.
தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.
அமெரிக்க தேசம் இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய தேசத்தின் வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.29) கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.9,470-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,760-க்கும் விற்பனை ஆகிறது.
கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இன்று வரை தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 25-ம் தேதி திங்கட்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.74,440 -க்கு விற்பனை செய்யப்பட்டது . இதுவே படிப்படியாக விலை உயர்ந்து இன்று 75,760-க்கு விற்கப்படுகிறது. அதாவது ஐந்து நாட்களில் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.1320 விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் உயர்ந்து, 131 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.