சென்னை: ஒரு பவுன் தங்கம் விலை நேற்று ரூ.80,040 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, நாள்தோறும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்து வந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 என பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் விலை ரூ.10,005 ஆக உயர்ந்து, ஐந்து இலக்கத்தை எட்டியது. ஒரு பவுன் விலை ரூ.80,040 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,914, ஒரு பவுன் ரூ.87,312 என்ற அளவில் இருந்தது.
இதேபோல, வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.138 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து, ரூ.1.38 லட்சமாகவும் இருந்தது. நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஜனவரி 3-ம் தேதி ரூ.58,080 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை தற்போது ரூ.80,040 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், கடந்த 8 மாதங்களில் ஒரு பவுன் விலை ரூ.21,960 அதிகரித்துள்ளது.