சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.2,440 குறைந்து, நேற்று ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது. குறிப்பாக, அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், போர்ப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
குறிப்பாக, கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.71,440-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.8,930-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.77,936-க்கு விற்பனையானது.
குறிப்பாக, கடந்த 22-ம் தேதி பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.71,440-ஆக குறைந்துள்ளது. அந்த வகையில், இந்த வாரம் மட்டும் ரூ.2,440 அளவுக்கு விலை குறைந்துள்ளது. இது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், வெள்ளியும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.119 என்றளவிலும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனையானது.