புதுடெல்லி: கூடுதல் வரிவிதிப்புகள் மூலம் இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிவைப்பதன் காரணங்களை அடுக்கி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கமம் அளித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்தக் கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து ரகுராம் ராஜன் விளக்கம் கொடுத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் சாராம்சம் வருமாறு: “இந்தியா மீது 50% வரியை டொனால்டு ட்ரம்ப் விதித்ததன் பின்னணியில் வர்த்தக, பொருளாதார காரணங்களையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், வர்த்தகத்தை தாண்டி அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த வரிவிதிப்பு எனலாம்.
அமெரிக்காவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, வர்த்தகப் பற்றாக்குறை என்பது மற்ற நாடுகள் அமெரிக்க நுகர்வோர் பயனடையும் வகையில் மலிவாக பொருட்களை அனுப்புவதற்குப் பதிலாக அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதால் ஏற்படுவதாக ட்ரம்ப் நம்புகிறார் என நான் நினைக்கிறேன். இந்தச் சிந்தனை ட்ரம்ப்புக்கு இன்று, நேற்று வந்ததல்ல. 1980-களிலேயே அவர் ஜப்பான் மீது இத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இதனால்தான், இறக்குமதி வரிவிதிப்பு வர்த்தகத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் என்றும் ட்ரம்ப் நம்புகிறார்.
மேலும், இத்தகைய வரிவிதிப்புகள் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்வோரையே பாதிக்கும்; அமெரிக்க நுகர்வோரை பாதிக்காது எனக் கருதுகிறார். ஆனால், உண்மையில் இது வருவாய் பெருக்கத்துக்கான ஒரு மலினமான உத்தி என்று கூறலாம். ட்ரம்ப் அதிபரான பின்னர் அமெரிக்காவில் சில வரி குறைப்புகளை அறிவித்திருந்தார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை இந்த இறக்குமதி வரிவிதிப்பு சரிகட்டும் என்று நம்புகிறார்.
அது மட்டுமல்ல, அமெரிக்கா தனது ராணுவத்தை பயன்படுத்தி ஆதிக்கத்தை செலுத்த முடியாத பகுதிகளில் இந்த வரி மூலம் தனது அதிகாரத்தை செலுத்திக் கொள்ளக்கூடும். இந்த வரிவிதிப்பின் விளைவு, ‘பிற நாடுகள் வருந்தும்’ என்பதாக இருக்க வேண்டும் என்பது அவரின் கணிப்பு” என்று ரகுராம் ராஜன் கூறினார்.
இந்தியா தனிமைப்படுத்தப்படுகிறதா? – மேலும், வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா பிற ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் கடுமையாக குறிவைக்கப்பட்டுள்ளதா, தனிமைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ரகுராம் ராஜன், “முதலில் பிற ஆசிய நாடுகள் போல் இந்தியா மீதும் 20% வரி விதிக்கலாம் என்ற புள்ளியில் தான் இந்தியா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. மோடி – ட்ரம்ப் நட்பு அதை சாத்தியப்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், அது ஒர்க் அவுட் ஆகவில்லை.
நமக்கு (இந்தியாவுக்கு) அடிப்படை வரியே 25% ஆக விதிக்கப்பட்டது. ரஷ்யாவுடன் இணக்கமாக உள்ள துருக்கி, சீனாவுக்கு கூட இந்த அளவுக்கு அடிப்படை வரி அதிகமாக விதிக்கப்படவில்லை. இந்தியாவுக்கான அடிப்படை வரியே 25% என்று விதிக்கப்பட்டது, நிச்சயமாக ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு பின்னடைவு தான். தனிமைப்படுத்துதல்தான். இவையெல்லாம் இந்தியா – அமெரிக்கா உறவு சிதைந்துவிட்டதையே உணர்த்துகிறது” என்றார்.
மேலும், ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்காக இந்த தண்டனையா என்ற கேள்விக்கும், “நியாயம், இறையாண்மை இவற்றையெல்லாம் தாண்டி ‘பவர் ப்ளே’ தான் இப்போது பெரும் பங்கு வகிக்கிறது எனலாம். ட்ரம்ப்பை பொறுத்தவரை இந்தியா விதிகளை பின்பற்றவில்லை. அதனால், அது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நம்புகிறார். அதனால் வரி விதித்துள்ளார்.
இந்தச் சூழலில், ரஷ்ய எண்ணெய்களால் ஏற்படும் லாபத்தைவிட அதிக வரிகளால் ஏற்படும் பாதிப்பைதான் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இந்தியா ஒரு சமநிலையான உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். ரஷ்யாவை மட்டுமே முழுமையாக நம்பாமல், பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் விருப்பத்தை வைத்திருக்க வேண்டும். அது, எதிர்காலத்தில் எந்தவொரு உலகளாவிய அரசியல் அல்லது பொருளாதார நெருக்கடியையும் இந்தியா எதிர்கொள்ள உதவும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகப்படியான லாபம் ஈட்டும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இங்கே உள்ளன. அவர்கள் இன்னும் அதே மாதிரியான அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறார்களா என்பதை அறிய வேண்டும். அப்படியிருந்தால், அந்த லாபத்தில் சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் அதிக வரியால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்காத வண்ணம் காக்கலாம்” என்றார் ரகுராம் ராஜன்.