புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறி, நேற்று (ஆக.6) இந்தியாவுக்கு கூடுதலாக மேலும் 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி வரும் 27-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதே நேரத்தில் ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியா டூ அமேரிக்கா – ஏற்றுமதி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 20 சதவீதம்தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என தகவல். அமெரிக்காவுக்கு ஓராண்டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. தற்போதைய வரி விதிப்பு நடவடிக்கையால் ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கக்கூடும்.
கடந்த 2023-24 நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் ஒட்டுமொத்த சதவீதம்: அமெரிக்கா – 18%, ஐக்கிய அரபு அமீரகம் 8%, நெதர்லாந்து 5%, சீனா 4%, சிங்கப்பூர், பிரிட்டன், சவுதி அரேபியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு தலா 3%, ஜெர்மனி மற்றும் இத்தாலிக்கு தலா 2%, மற்ற உலக நாடுகளுக்கு 49% என உள்ளது. இதை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் தரவுகள் தெரிவித்துள்ளன.
உலக அளவில் இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்ற காரணத்தால் ஏற்கெனவே அறிவித்த அமெரிக்க இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
உலக வங்கியின் (ஜிடிபி 2023) தரவுகளை வைத்து பார்க்கும்போது மற்ற உலக நாடுகளை காட்டிலும் ஏற்றுமதி சார்ந்த இந்தியாவின் பொருளாதாரம் சற்று குறைவாகவே உள்ளது. இந்த பட்டியலில் வியட்நாம் நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதி சார்ந்து 87% என உள்ளது. தாய்லாந்து 65%, துருக்கி 32%, பிலிப்பைன்ஸ் 27%, இந்தியா மற்றும் இந்தோனேசியா தலா 22%, வங்கதேசம் 13% என உள்ளது.
இருப்பினும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் சில பிரிவுகளில் அமெரிக்காவை சார்ந்துள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கடந்த 5-ம் தேதி அன்று பொருளாதார நிபுணர் தன்வி குப்தா ஜெயின் கூறியதாவது, “அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கையால் ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் மாதிரியான தொழில் பிரிவுகளில் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
பங்குச்சந்தை முதலீட்டில் பாதிப்பு? – இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ள காரணத்தால் இந்திய பங்குச்சந்தை முதலீட்டில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் இதனால் பாதிப்பு இருக்காது என கருதப்படுகிறது.
தற்போது இந்திய பொருட்கள் மீதுதான் அமெரிக்கா வரி விதித்துள்ளது. அதனால் ஐடி சேவை சார்ந்த முதலீடுகளில் பாதிப்பு ஏதும் இருக்க வாய்ப்பு இல்லை என முதலீட்டு ஆலோசகர் ரஜத் அகர்வால் கருதுகிறார். இருப்பினும் அமெரிக்க வரி விதிப்பு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் தாக்கம் பங்குச்சந்தையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வரி விலக்கு? – அமெரிக்காவுக்கு அதிக அளவில் இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. அதற்கு இந்த வரி விதிப்பில் விலக்கு இருக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஸ்டீல் மற்றும் அலுமினியம் உள்ளிட்ட உலோக பொருட்களின் ஏற்றுமதிக்கு பிரத்யேக உத்தரவின் மூலம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த துறை சார்ந்த வணிக ஏற்றுமதியில் பாதிப்பு இருக்காது. இதேபோல பரஸ்பர வரி விதிப்பிலிருந்து செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருட்களுக்கு விலக்கு உள்ளது. அதனால் இந்தியாவில் பெரிய அளவில் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவன ஏற்றுமதியில் இந்த வரி விதிப்பு காரணமாக பெரிய பாதிப்பு இருக்காது என தெரிகிறது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக உடன்படிக்கை ஏற்பட்டால் நிச்சயம் இந்த வரி விதிப்புக்கு தீர்வு கிடைக்கும் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.