சென்னை: அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 சீரிஸ் போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளது. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிள் ஐபோன் உற்பத்தியில் இந்தியா மற்றும் சீனா என இரண்டு நாடுகளும் பிரதான அங்கம் வகித்து வருகின்றன. இருப்பினும் அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. விலை ஏற்றத்தை பொருளாதார வல்லுநர்களும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். ஏனெனில், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை இறக்குமதி செய்து வருகிறது.
ட்ரம்ப் உடனான செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீட்டை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் தெரிவித்தார். இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 20% மற்றும் இந்திய இறக்குமதிக்கு பூஜ்ஜியம் சதவீதம் என அமெரிக்க அரசு ஆப்பிள் நிறுவனத்துக்கு வரி விலக்கு வழங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16 சீரிஸ் போன்களை காட்டிலும் சுமார் 50 டாலர் கூடுதலாக ஐபோன் 17 சீரிஸ் விலை இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஐபோன் 17 – 849 டாலர், ஐபோன் 17 புரோ – 1,199 டாலர், ஐபோன் 17 புரோ மேக்ஸ் – 1,249 டாலர் மற்றும் ஐபோன் 17 ஏர் – 949 டாலர் என விலை இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த போன்களின் விலை ரூ.89,900 முதல் ரூ.1,64,900 வரை இருக்கும்.