சென்னை: சென்னையில் சிஎன்ஜி விலை டீசலுக்கு இணையாக உயர்ந்த நிலையில், தட்டுப்பாடும் நிலவுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுபாடு விவகாரத்தில், ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பை ஏற்படுத்துவது, அதிக மைலேஜ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு தழுவிய அளவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு வரவேற்பு நிலவுகிறது.
இதனால் டீசல், பெட்ரோல் வாகனங்களையும் சிஎன்ஜியில் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றன. இதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் தமிழக போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது. அதேநேரம், சென்னையில் தொடர்ச்சியாக சிஎன்ஜி விலை உயர்ந்து வருவதோடு, தட்டுப்பாடும் நிலவுவதாக கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் போல சிஎன்ஜி நிலையங்கள் அதிகளவில் இல்லை. சமூக வலைதளங்கள் மூலமே சிஎன்ஜி இருப்பதை உறுதி செய்யும் நிலை உள்ளது. மேலும், கடந்த ஓராண்டில் (2024 ஜூலை முதல்) ரூ.4 என்றளவில் சிஎன்ஜி விலை உயர்ந்து டீசல் விலைக்குநிகராக வந்துள்ளது. இத்தகைய சூழலில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் டேங்கில் இருந்து 500 அடி தொலைவில் தான் சிஎன்ஜி டேங்க்கை வைக்க வேண்டும். அருகில் 5 மாடி கட்டிடமோ, பள்ளியோ இருக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை நகருக்குள் சிஎன்ஜி நிலையத்தை அமைப்பது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இதனால் தட்டுப்பாட்டு நிலவுகிறது.
சிஎன்ஜி இருக்கும் இடத்தை அறிந்து எரிபொருள் நிரப்ப தினமும் 1 மணி நேரம் ஆகிறது. தமிழக அரசே முன்வந்து இடவசதி ஏற்பாடு செய்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு நிபுணர் வளவன் அமுதன் கூறியதாவது: சென்னையில் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அமைக்கும் சிஎன்ஜி நிலையத்தில் நிலத்தின் அடியில் டேங்க் அமைப்பதில்லை. மேற்புறத்தில் அமைப்பதால் போதிய அழுத்தத்துடன் சிஎன்ஜியை நிரப்ப முடியாது. இதுபோன்ற உட்கட்டமைப்பு இல்லாதது ஆபத்தை விளைவிக்கும். விலையும் மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களை விலை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். வாகன விற்பனைக்கு ஏற்ப சிஎன்ஜி விநியோகத்துக்கான நடவடிக்கையை அரசு துரிதப்படுத்த வேண்டும். தற்போதுள்ள விலையையும் குறைக்க வேண்டும். அதேநேரம், கழிவில் இருந்து எடுக்கப்படும் சிபிஜி வாயு (1 கிலோ ரூ.70) நிலையத்தை அமைப்பதிலும் தொழில்துறை ஊக்குவித்து முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். ஆட்டோவில் டீசல் பயன்படுத்தினால் 1 கிமீ-க்கு ரூ.4.62 செலவாகிறது. இதுவே சிஎன்ஜி பயன்படுத்தினால் ரூ.1.83 மட்டுமே செலவாகும்.
சிஎன்ஜி விலை (1 கிலோ) – பெங்களூரு – ரூ.89, ஹைதராபாத் – ரூ.96, புதுச்சேரி ரூ.78, விசாகப்பட்டினம் 89, சென்னை – ரூ.91.5.