புதுடெல்லி: ஜெர்மனியில் ரூ.3,819 கோடிக்கு தமிழகம் பெற்ற முதலீட்டுக்கு தமிழர்களான இரண்டு குடிமைப் பணி அதிகாரிகள் அடித்தளம் இட்டுள்ளனர்.
முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தமிழகம் திரும்பினார். முதல்வரின் பயணத்துக்கு ஜெர்மனியில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதன்முறையாக நடைபெற்ற ’தமிழ்நாடு நாள்’ காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் எங்கும் இல்லாத வகையில் தமிழர்களுக்கான இந்த முதல் கொண்டாட்டம் பிராங்பர்ட்டில் நடைபெற்றது. இதை அந்நகரின் இந்திய தூதரகத்தின் கவுன்சில் ஜெனரலாக இருந்த பி.எஸ்.முபாரக் முன்னிறுந்து நடத்தி இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ‘கர்நாடகா நாள்’ மற்றும் ‘மகராஷ்டிரா நாள்’ ஆகியவையும் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளுக்கு இந்தியாவின் பல மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் சென்று வருவது வழக்கம்.அவர்களுக்கு இந்திய தூதரகங்கள் ’இன்வெஸ்ட் இந்தியா’ உள்ளிட்ட மத்திய அமைச்சகங்களை அந்நாடுகளுடன் தொழில் உள்ளிட்டப் பல்வேறு வகை தொடர்புகளை ஏற்படுத்துகின்றன.
ஆனால், இந்த தொடர்புகளால் ஏற்படும் திட்டங்கள் பலவும் மாநிலங்களில் தான் செயல்படுத்தப் படுகின்றன. எனவே, இந்திய தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் முபாரக், ஜெர்மனியுடன் நேரடியாக தமிழக அரசை தொடர்புகொள்ள வைத்தது தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடு பெற உதவிகரமாக அமைந்துள்ளது. இதைப் போல மகராஷ்டிரா, கர்நாடகா போன்ற இதர மாநிலங்களுக்கும் அண்ணிய முதலீடு பெற உதவியாக முபாரக் இருந்துள்ளார். கடந்த மாதம் ஆகஸ்ட்டில் மத்திய பாஸ்போர்ட் அலுவலகங்களின் தலைமை அதிகாரியாக முபாரக் டெல்லிக்கு மாற்றலாகி உள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் நாகர்கோயில் தமிழரான ஐஎப்எஸ் அதிகாரி முபாரக் கூறியது: ”நான் பிராங்பர்ட்டிற்கு வந்தவுடன் பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தோர் என்னை சந்தித்தனர். இவர்களுக்கு தாம் தவறவிட்ட உணவு வகைகள், கலாச்சாரங்கள் தேடுதலாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெருநிறுவனங்களில் முக்கியப் பதவி வகிப்பவர்கள். இவர்களது திறமைகளையும், ஆர்வத்தையும் நம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டேன்.
இந்திய மாநிலங்களை முன்னிறுத்த மத்திய அரசு தனியாக ஒதுக்கும் நிதியில் இதைச் செய்ய முடிவு செய்தேன். சுமார் ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு பல சிறு குழுக்களை உருவாக்கி நடத்தப்பட்டது ’தமிழ்நாடு நாள்’. தமிழர்களின் ஐரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பும், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் உள்ளிட்ட தமிழ் சங்கங்களும் எனக்கு பெரிதும் உதவின. இதில் கலந்துகொள்ளக் கோரி நான் தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதினேன்.
இக்கடிதத்திற்கு உடனடியாக பதிலளித்து அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, சக்ரபாணியுடன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்களுடன் நாம் ஜெர்மனியின் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் கலந்துகொண்டனர். ஒரு நாள் முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 30-ல் தமிழ்நாடு தொழில் முதலீடு மாநாடும் நடத்தப்பட்டது. புலம் பெயர்ந்த அமைப்புகளில் முக்கியமானவர்களான (BMW)பிஎம்டபுள்யுவின் டேனியல் ராஜா, ஜெர்மன் இந்தியா பிஸ்னஸ் அலையன்ஸின் பி.செல்வகுமார் பல வருடங்களாக தமிழர்களுக்கான நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கும் தம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவ இந்த தமிழ்நாடு நாள் காரணமானது. ஜெர்மனி சார்பில் கலந்துகொண்டவர்களும் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாட்டின் சூழலையும் புரிந்துகொண்டனர். பிறகு தமிழ்நாட்டில் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தம் தொடர்பை வளர்த்துக் கொள்ளத் துவங்கினர்.
இதன் பலனாக புலம்பெயர்ந்த அமைப்புகளாலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு பெற்றது. இதனிடையே, தமிழ்நாடு நாள் நிகழ்வின் பலனாக, தமிழக முதல்வர் ஜெர்மனியின் தொழில் முதலீடுகள் பெற நேரில் வருவதும் முடிவானது. சந்திப்பிற்கு உகந்த இடமாக டுசுல்டார்பை தேர்வு செய்தேன். இந்நகரை தலைநகராகக் கொண்ட என்ஆர்டபுள்யு மாகாணத்தின் முதல்வருடன் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்தோம். இதற்கு, ஜெர்மனியின் 16 மாகாணங்களில் 25 சதவிகித பொருளாதாரத்தை அளிப்பது என்ஆர்டபுள்யு என்பது காரணம். என்று முபாரக் தெரிவித்தார்.
இங்கு கலந்துகொண்ட ஜெர்மனி தொழில் அதிபர்களுடன் தமிழக முதல்வர் நேரடியாகப் பேசி 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இட்டுள்ளார். இதில், அமைச்சர் ராஜா ஆற்றியப் பங்கு மிகவும் முக்கியமானது. இதுபோல், ஒரு மாநில அரசே நேரடியாக வெளிநாட்டுடன் பேசி முதலீட்டைப் பெறுவது சாதாரண நடவடிக்கை அல்ல எனக் கருதப்படுகிறது.
இந்தியாவில் 2,000 ஜெர்மனி நிறுவனங்கள்: இதற்காக, தொடர்ந்து பேச்சுவார்த்தை, முன் ஏற்பாடுகள் மற்றும் இருதரப்பின் ஒருங்கிணைப்பு அவசியம். இதை, தமிழ்நாடு நாள் நிகழ்விற்கு வந்த அமைச்சர் ராஜாவும், தமிழகத்திற்கான ஜெர்மனியின் தொழில் முதலீடு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை உணர்ந்துள்ளார். ஏனெனில், இந்தியாவில் நூறாண்டிற்கு முன்பிலிருந்து ஜெர்மனியின் சுமார் 2,000 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
ஜெர்மனியின் முதலீடு 100 பில்லியன் டாலர்: இவை பெரும்பாலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஜெர்மனி அயல்நாடுகளில் 100 பில்லியன் டால்டர் மதிப்பில் முதலீடு செய்கிறது. இவை, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்கிறதே தவிர, ஒரு பில்லியன் மதிப்பிலான முதலீடு கூட இந்தியாவிற்கு வருவதில்லை. கைடன்ஸ் எம்.டி தாரேஸ் அகமது
எனவே, அமைச்சர் ராஜா தொடர்ந்து வெளியுறவுத் துறை அதிகாரி முபாரக் மற்றும் ஜெர்மனி தொழில் நிறுவனங்களிடம் தொடர்பில் இருந்துள்ளார். தம் அமைச்சகத்தின் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவன எம்டியான டாக்டர். தாரேஜ் அகமதுவை கடந்த ஏப்ரலில் ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளார். 2005 பேட்ச்சின் தமிழ்நாடு பிரிவு அதிகாரியான இவர், பிரபல இங்கிலாந்தின் ’லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்’ கல்வி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
ஜெர்மனி வந்த எம்டி தாரேஜை, என்ஆர்டபுள்யு முதல்வர் உஸ்டினின் வெளியுறவுத் துறை அமைச்சரும் வலதுகரமுமான லிவின்ஸ்கீயுடன் பேச்சுவார்த்தைக்கு ஐஎப்எஸ் அதிகாரி முபாரக் ஏற்பாடு செய்துள்ளார். இதன் அடிப்படையில் எம்டியான தாரேஜ், ஜெர்மனியின் தொழில் சூழலைத் தெளிவாகப் புரிந்து, அளித்த அறிக்கையும் முதல்வரின் ஜெர்மனி பயணத்தின் வித்தாகி உள்ளது.