சென்னை: பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி 13 சதவீதம் வரை குறைக்கப்படுவதால், நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று சென்னையில் நடைபெற்ற வர்த்தக, தொழில் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை சிட்டிசன் மன்றம் சார்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில், வர்த்தக, தொழில் சங்கங்களின் கூட்டு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநாட்டுக்கு தலைமை வகித்து பேசியதாவது: தினந்தோறும் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் ஜிஎஸ்டி வரியின் தாக்கம் இருக்கும். அந்த வகையில், 5, 12, 18, 28 சதவீதம் என 4 பிரிவாக இருந்த ஜிஎஸ்டி விகிதங்களை தற்போது 5, 18 சதவீதம் என இரண்டே பிரிவாக கொண்டு வந்துள்ளோம். இதில் 350-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 12 சதவீதஜிஎஸ்டி பிரிவில் இருந்த 99 சதவீத பொருட்கள், 5 சதவீத பிரிவுக்குள் வந்துள்ளன.
அதேபோல, 18 சதவீத பிரிவில் இருந்த 90 சதவீத பொருட்கள் 5 சதவீத பிரிவுக்குள் வந்துள்ளன. இதனால், பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி 13 சதவீதம் வரை குறைந்துள்ளது. வகைப்பாடு எளிமையாக்கப்பட்டதால் அனைத்து உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்துக்குள் வந்திருக்கிறது. அதேபோல, 3 நாட்களில் ஜிஎஸ்டி பதிவு செய்துகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜிஎஸ்டி பதிவை திரும்ப பெறும்போது, அவர்களிடம் திருப்பி தரவேண்டிய 90 சதவீத பணம் எந்த ஒரு கேள்விக்கும் இடமின்றி உடனடியாக வழங்கப்படும்.
அந்த வகையில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் தாக்கம் நல்லபடியாகவே இருக்கும். வீடுகளில் செலவு குறையும். நாட்டின் 140 கோடி மக்களுக்கும் இதன் பலன் கிடைக்கும். ஜிஎஸ்டி விவகாரத்தில் எனக்கு ஊறுகாய்தான் போடத் தெரியும் என்று விமர்சித்தனர். 2017-ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்ட போது 65 லட்சம் பேர் மட்டுமே அதில் இணைந்திருந்தனர். இன்று 1.50 கோடி பேர் இணைந்துள்ளனர்.
ரூ.2 லட்சம் கோடி வருமானம்: தற்போது ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.2 லட்சம் கோடி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அதில் 23 சதவீதம் மத்திய அரசுக்கும், எஞ்சியவை மாநில அரசுக்கும் சென்றடையும். அந்த வகையில் ஜிஎஸ்டி மூலம் மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் பயன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த ‘ஜிஎஸ்டி 2.0’ என்ற நூலை அவர் வெளியிட்டார். முன்னதாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து பேசியபோது, ‘‘கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், அனைத்து மக்களும் பயன்படும் வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், விலைவாசி குறையும். வேலைவாய்ப்புகள் உருவாகும். ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தபிறகு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் பொருட்களின் மீதான வரி எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்ற விலை விவரத்தை தகவல் பலகையில் வணிகர்கள் இடம்பெற செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
மாநாட்டில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஜிஎஸ்கே.வேலு, தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்சபை நிர்வாகி டி.ஜி.சுரேஷ், இந்திய தொழில் துறை கூட்டமைப்பின்தமிழ்நாடு தலைவர் ஏ.ஆர்.ஸ்ரீ உன்னிகிருஷ்ணன், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் துரை பழனிசாமி, ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் ஏ.சக்திவேல், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உட்பட பல்வேறுஅமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் தங்களது துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அவர்கள் பேசினர்.