தீபாவளி தினத்தன்று ஜிஎஸ்டி வரி விதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என கோவையை சேர்ந்த தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜஷ் லுந்த்: சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் வரி குறைப்பு, தானியங்கி முறையில் ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வணிகத்தை எளிமையாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பிரதமரின் அறிவிப்புக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.
தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ்: மிகப்பெரிய அளவில் ஜிஎஸ்டி மாற்றங்கள் கொண்டு வந்து தொழில்துறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மாற்றியமைப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 2017-ம் ஆண்டில் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் இருந்து இன்று வரை உள்ள பல்வேறு குழப்பங்கள் நிறைந்துள்ளதால் குறு, சிறு தொழில் முனைவோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, காலதாமதமாக வரி செலுத்தினால் அபராதம் விதிப்பது, ஆன்லைன் வணிக போக்குவரத்து அனுமதி சீட்டு (இவே பில்) ரத்து செய்வது, வங்கி கணக்கு முடக்குவது போன்ற பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தீபாவளி தினத்தன்று வெளியிடப்படும் அறிவிப்பு தொழில் துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் என அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்ற நம்பிக்கையுடன் தொழில் துறையினர் காத்திருக்கின்றனர்.