மதுரை: “4 ஆக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களை 2 ஆக குறைத்துள்ளோம்; அவற்றையும் ஒன்றாக மாற்றுவோம்” என மதுரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
மதுரையில் இன்று தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா அதன் தலைவர் வேல்சங்கர் தலைமையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது. கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறந்த தொழிலதிபர்களுக்கு விருதுகள் வழங்கியும், சங்கத்தின் 80-வது ஆண்டு மலரையும் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசியது: “மதுரை என்றாலே சங்கம்தான், அதில் 80 ஆண்டுகளாக சங்கம் நடத்துவதும் பெருமைதான். பிரதமர் மோடி தமிழகத்துக்கு தேவையானவற்றை புரிந்துகொண்டு செய்து வருகிறார். தற்போது செய்தது ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, அது ஒரு புரட்சி. ஜிஎஸ்டியில் 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு வரி விகிதங்கள் இருந்ததை தற்போது 2 விகிதங்களாக்கியுள்ளோம் என்பதை தமிழகத்தில் உள்ளோர் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் செய்கின்றனர். மத்திய அரசு அமல்படுத்தும்போதே அதிகமாக நிர்ணயித்துவிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் வலியறுத்தியதால் குறைத்ததாக விமர்சிப்பதை எதிர்க்கிறேன். எல்லா மாநில நிதியமைச்சர்களும் சேர்ந்து எடுத்த முடிவுதான் பழைய வரி விகிதம். இதில் நாடகம் செய்ய வேண்டிய தேவை மோடி அரசுக்கு இல்லை. அதிபுத்திசாலித்தனமாக மக்களை ஏமாற்றி ஆதாயம் சம்பாதித்துவிட்டு தற்போது நாடகம் ஆடுவதாக ஒரு பெரியவர் கூறினார். அவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.
ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது கோவிட் காலம் வந்ததால் குறைக்க இயலவில்லை. தற்போது 375 பொருட்களுக்கு வரியை பூஜ்ஜியம் ஆக குறைத்துள்ளோம். 4 ஆக இருந்த வரி விகிதங்களை 2 முறைக்கு கொண்டுவந்துள்ளோம். வரும் காலங்களில் 2 வரி விகிதத்தை ஒரே வரி விகிதமாக்குவோம். ராகுல் காந்தி இதை கொடூரமான வரி முறை என்கிறார். அவரது பேச்சுப்படி பார்த்தால் ஜிஎஸ்டி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்திருகக வேண்டும். 2017-ல் 65 லட்சம் பேர் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் இருந்தனர். தற்போது ஒன்றரை கோடி பேர் ஜிஎஸ்டியில் சேர்ந்துள்ளனர்.
வரி விகித மாற்றத்துக்கு ஆலோசனை கூறிய எல்லா மாநில அமைச்சர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நன்றி கடிதம் அனுப்பினேன். ஒரு மாநிலத்திற்கும், நாட்டிற்கும் வரி மூலம் வர வேண்டிய பணம் முக்கியம். அப்போதுதான் நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும். தற்போது ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்களிடம் ரூ.2 லட்சம் கோடி பணப்புழக்கம் இருக்கும். வரியை குறைத்ததால் வரியானது அரசுக்கு வராமல் மக்களிடமே இருப்பதால் மக்கள் கையில் 2 லட்சம் கோடி பணப்புழக்கம் இருக்கும்.
ஜிஎஸ்டி மூலம் நிலையான வளர்ச்சி இருக்கும்போது ஒரே வரி விகிதமாக மாற்றுவோம். இன்றைய தேதியில் ஒன்றாக்க முடியாது. இந்தியா முழுவதும் நிலையான ஒரே வளர்ச்சி இருக்கும்போது ஒரே வரிவிகிதமாக்குவோம்” என்று அவர் பேசினார். இதில் பாஜக மாநிலச் செயலாளர் ராம.சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.