புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் அமலுக்கு வருவதையொட்டி பல பொருட்களின் விலை குறையவும் மேலும் பல பொருட்களின் விலைஉயரவும் உள்ளது.
அதன் விபரம் வருமாறு: தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறையும் போது பயனடையும் துறைகள்:
ஆட்டோமொபைல்: கார், மோட்டார் சைக்கிள் ஜிஎஸ்டி 28% -லிருந்து 18% ஆக குறையும்.
விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு: தங்கும் விடுதிகள், சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5%- ஆக குறையும்.
காப்பீட்டுக்கு முழு விலக்கு: தனி நபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாட பயன்பாட்டு பொருட்கள்: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான பனீர், பீட்ஸா, பிரட், பழச்சாறு, இளநீர், பட்டர், சீஸ், பாஸ்தா, ஐஸ்கிரீம் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12% -லிருந்து 5% ஆக குறையும். பற்பசை, ஷாம்பூ, ஆயில், சோப்புக்கான வரி 18%-லிருந்து 5% ஆகவும் குறையும்.
விலை உயரும் பொருட்கள்: புகையிலை, பான்மசாலா, ஆடம்பர மோட்டார் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 40 சதவீதமாக அதிகரிக்கும்.
ரூ.20-40 லட்சம் விலையுள்ள மின்சார கார்களுக்கு ஜிஎஸ்டி 5% லிருந்து 18 சதவீதமாக உயரும். ரூ.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடம்பர மின் வாகனங்களுக்கு 40% வரி விதிக்கப்படும்.
ஆடைகளுக்கு… ரூ.2,500-க்கு அதிகமான ஆடைகளுக்கான ஜிஎஸ்டி 12%லிருந்து 18%-ஆக உயரும். நிலக்கரி உள்ளிட்ட சில எரி பொருட்களுக்கான வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரிக்கும்.
இந்த ஜிஎஸ்டி மாற்றங்களால் ரூ.50,000 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் உள்நாட்டு சந்தையில் நுகர்வு நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.