புதுடெல்லி: கடந்த சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியில் 12%, 28% வரம்பு நீக்கப்பட்டு வரி முறை எளிதாக்கப்படும் என கூறினார். இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க மாநில நிதியமைச்சர்கள் சென்றுள்ளனர். அவர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர்கள் குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர். அவர்கள் ஜிஎஸ்டி வரியில் 12%, 28% வரம்புகளை நீக்குவதற்கு பரிந்துரை செய்தனர்.
இது ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி பரிசீலனைக்கு செல்கிறது. இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கினால், ஜிஎஸ்டிவரி முறையில் 5% மற்றும் 18% மட்டுமே இருக்கும். மற்றவை நீக்கப்படும்.
இவற்றுக்கு பதிலாக ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி முறை அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மாநிலத்துக்கான பங்கீடு மற்றும் வருவாய் இழப்புக்கான இழப்பீடு குறித்த கேள்விகளை ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்யும்.
மத்திய அரசு அறிவித்த 12%, 28% வரி நீக்கம் திட்டத்தை அனைத்து அமைச்சர்களும் பரிந்துரைத்தனர். சில மாநிலங்கள் மட்டும் சில கருத்துகளை தெரிவித்தன. அவை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிஹார் துணை முதல்வரும், ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான சாம்ராட் சவுத்திரி தெரிவித்தார்.