புதுடெல்லி: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அமலுக்கு வந்ததும், அதன் சலுகைகளை தொழில் துறைகள் உடனடியாக நுகர்வோருக்கு கடத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்தியப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தொழில் துறையினருக்கு வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வர்த்தகம் மற்று தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “முதலில், ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு ரூபாய் சேமிப்பும், புதிய வரி விகிதம் அமலுக்கு வந்தவுடனேயே நுகர்வோருக்குக்கு கிடைக்கச் செய்யுங்கள். அடுத்ததாக இந்தியப் பொருட்கள் விற்பனையை ஊக்குவியுங்கள்.
இந்திய மண்ணில், இந்தியர்களின் உழைப்பில் சிந்தும் வியர்வையில் உருவாகும் பொருட்களை ஆதரிக்க வேண்டியது அவசியம். அத்தகைய பொருட்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் சென்று சேரும்போது, அது தேசத்தின் பெருமித அடையாளமாக, தற்சார்பு குறியீடாக மிளிரும்” என்று கூறியுள்ளார்.